தோட்டம் – கேள்வி-பதில் – Part-2

எனக்கு வரும் பொதுவான கேள்விகளுக்கான பதில்கள் ஒரு சிறிய தொகுப்பாய். பதிவின் படத்திற்கு புதிய பந்தலில் வந்து கொண்டிருக்கும் திராட்சை கொத்து 😀

கேள்வி-பதில் – Part-1

வளர்ப்பு பைகளை ஒரு முறை பயன்படுத்திய பிறகு மீண்டும் வளர்ப்பு ஊடகம் தயார் செய்து நிரப்பி தான் செடி வைக்க வேண்டுமா?

முதன் முதலாய் வளர்ப்பு பைகளை தயார் செய்யும் வளர்ப்பு ஊடகமே அடுத்த சீசனுக்கும்  போதுமானது. மறுபடி எல்லாவற்றையும் கீழே கொட்டு நிரப்ப வேண்டியதில்லை. மறுமுறை செடி வைப்பதற்கு முன் மேலே ஒரு மூன்று இன்ச் அளவுக்கு கிளறி கொஞ்சம் மண்புழு உரம் (ஒரு அடி அகலம் உள்ள பை என்றால் ஒரு அரை கிலோ மண்புழு, 1 ½ அடி அகலம் என்றால் ஒரு கிலோ என்ற அளவில்) போட்டு கலந்து மீண்டும் செடி வைக்க வேண்டியது தான். ஒரு உள்ளங்கை அளவு செம்மண் கலந்து கொள்ளலாம். செம்மண் கலக்க இடம் இல்லை என்றால் செம்மண்ணை நீரில் நன்கு கலந்து அந்த நீரை ஊற்றி விடலாம் (நன்கு கலக்கும் போது மணல் மட்டும் கீழே தங்கி செம்மண் கலவை நீரில் இருக்கும்). இந்த முறையில் நான்கு ஐந்து வருடங்கள் வரை கூட ஒரே பையில் இருக்கும் ஊடகத்தை பயன்படுத்தலாம்.

எந்த சீசனில் எந்த எந்த காய்கறிகளை விதைக்கலாம்? ஏதும் பட்டியல் இருக்கிறதா? (பகுதி-1 ல் பதில் கூறி இருந்தாலும் கொஞ்சம் விவரமாய் இந்த பதிவிலும் கொடுக்கிறேன்)

பொதுவாய் நாம் இரண்டு முக்கிய சீசன்களை கூறலாம். ஆடிப்பட்டம் (ஜூலை) மற்றும் தைப்பட்டம் (ஜனவரி). நான் பொதுவாய் ஜூலை வரை காத்திருப்பதில்லை. கோடை முடிந்து ஓரளவுக்கு வெயில் குறைந்தவுடன் ஜூன் முதல் வாரத்திலேயே அந்த சீசனுக்கான விதைகளை விதைத்து விடுவேன். அடுத்தது டிசம்பர் குளிர் முடிந்து ஜனவரியில் அடுத்த சீசனை தொடங்கலாம்.

வீட்டுத் தோட்டத்தை பொறுத்தவரை இந்த இரண்டு சீசனை தவிர இடையில் தேவைப்படும் போது தாளமாய் விதைக்கலாம். நம் தோட்டத்தில் இருந்து தொடந்து காய்கறி வர வேண்டும் என்றால் ஒரு சீசனின் செடிகள் காய்க்க ஆரம்பிக்கும் போது அடுத்த சீசனுக்கு விதைக்க ஆரம்பிக்கலாம்.

ஜூன்-ஜூலை சீசனில் கோஸ், காலி ஃப்ளவர், காரட் போன்ற ஆங்கில காய்கறிகளை விதைக்கலாம். நவம்பர்-டிசம்பர் குளிரில் விளைச்சல் எடுக்க சரியாக இருக்கும். இவைகளை கோடையில் விளைச்சல் வரும்படி விதைப்பது சரி அல்ல. அதே போல ஜனவரி சீசனில் தர்பூசணி, முலாம்பழம் போன்றவற்றை கோடையை கணக்கிட்டு விதைக்கலாம். மற்றபடி வீட்டுத்தோட்டத்தில் மற்ற காய்கறிகளை வருடம் முழுவதும் விதைக்கலாம். பெரிய அளவில் நிறைய செடிகளை கொண்டு செய்யும் போது தைப்பட்டம் மற்றும் ஆடிப்பட்டத்தில் ஆரம்பிக்கலாம்.

செடிகளில் வரும் பூச்சி தாக்குதலை எப்படி சமாளிப்பது? என்ன என்ன பூச்சிகளுக்கு என்ன தெளித்து கட்டுப்படுத்தலாம்?

வீட்டுத்தோட்டம் ஆரம்பிக்கும் எல்லோருக்கும் இருக்கும் மிகப் பெரிய சவால் பூச்சித் தாக்குதல் தான். நாம் இணையத்தில் எவ்வளவு தகவல்கள் சேகரித்தலும், என்ன முயற்சிகள் செய்தாலும் நிறைய தடவை செடிகளை காப்பாற்ற முடியாமல் போகும்.

பொதுவாய் இயற்கை முறை பூச்சிக் கொல்லிகள் பூச்சிகளை உடனே விரட்டுவதில்லை (இரசாயன பூச்சிக் கொல்லிகள் ஒரு முறை தெளித்து பாருங்கள். தெளித்து அடுத்த நொடி எல்லாம் செத்துப் போகும்). நாம் கூறிய முறைகளை செய்து பார்த்து ஒன்றும் நடக்காமல் வெறுத்து போவோம்.

வீட்டுத் தோட்டத்தில் பூச்சிக் கட்டுப்படுத்துவதில் முதல் முக்கியமான படி, தினமும் தோட்டத்தை கவனிப்பது. ஒவ்வொரு செடியாய் கவனித்து பார்க்கவேண்டும். சில பூச்சிகள் (உதாரணமாக வெண்டையில் வரும் மாவுப் பூச்சி) நாம் ஒரு இரண்டு, மூன்று நாள் கவனிக்காமல் செடியை விட்டுவிட்டால், மொத்த செடியின் வளர்ச்சியையும் காலி செய்து விடும். தொடக்கத்திலேயே கவனித்தால் தான் சரி செய்ய முடியும்.

முதலில் உடனடியாக எல்லா பூச்சிகளையும் குச்சியை வைத்தோ, மென்மையான பிரஸ் கொண்டோ கொஞ்சம் நேரம் செலவானாலும் நீக்கி விடவேண்டும். பூச்சிகளை நீக்காமல் வெறுமனே எதையாவது கலந்து தெளித்து காத்திருப்பது செடிகளை மேலும் சேதமாக்கும். பூச்சிகளை நீக்கிவிட்டு பிறகு நமக்கு தெரிந்த கலவைகளை தெளித்து விடலாம்.

நான் முக்கால்வாசி நேரம் நீரில் வேப்பம் புண்ணாக்கு (ஒரு லிட்டர் நீரில் ஐம்பது கிராம் அளவில்) கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து தெளித்து விடுவேன். இணையத்தில் தேடினால் இயற்கை பூச்சி விரட்டிகள் பற்றி எக்கச்சக்கமாய் தகவல்கள் கிடைக்கும். நாம் கொஞ்சம் நேரம் செலவிட்டால் அவற்றையும் முயற்சித்து தாக்குதலை கட்டுக்குள் கொண்டுவரலாம்.

செடி செழிப்பாக இருக்கிறது, ஆனால் பூக்கவே இல்லை. பூக்கிறது ஆனால் பிஞ்சி பிடிப்பத்தில்லை. பிஞ்சி பிடித்தாலும் உதிர்ந்து விடுகிறது. என்ன செய்ய?

ஒரு செடி நல்ல விளைச்சலை கொடுப்பதற்கு நிறைய காரணிகள் இருக்கிறது. முதலில் விதையின் தன்மை. விதை காலாவதியான பழைய விதையாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பழைய காலாவதியான விதைகள் இருந்தால் யோசிக்காமல் கழித்து விடுங்கள். நாட்டு விதைகள் என்றால் ஒவ்வொரு சீசனிலும் ஓரிரண்டு காய்களை விதைக்கு விட்டு புதிதாக விதைகளை எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

அடுத்தது வளர்ப்பு ஊடகம், அதன் உயிர் தன்மை. தரை தோட்டம் என்றால் ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு அடி ஆழத்திற்கு நன்கு கிளறி, சாணம், இலை சருகுகள், கொஞ்சம் மண்புழு உரம் கலந்து மீண்டும் விதைக்கலாம். இருமடிப் பாத்தி பற்றி ஏற்கனவே இந்த பதிவில் கூறி இருக்கிறேன். நம் செடி வைக்கும் மண் எவ்வளவு உயிர்தன்மையோடு இருக்கிறது, எவ்வளவு இளகிய தன்மையோடு இருக்கிறது  என்பது மிக முக்கியம். செடி வைத்த பிறகு கூட கிடைக்கும் இலை சருகுகள், சாணம் என்று போட்டு வரலாம்.

மாடித் தோட்டத்தில், வளர்ப்பு ஊடகத்தை சரியாக முதலிலேயே செய்ய வேண்டும். செடி வளர்ந்து வளர்ச்சி குன்றி நிற்கும் போது நாம் என்ன தான் உரத்தை அள்ளிப் போட்டாலும், பஞ்சகாவ்யாவை தெளித்தாலும் பெரிதாய் முன்னேற்றம் இருக்காது.

ஒரு காய்கறி செடிக்கு குறைந்தது ஐந்தில் இருந்து எட்டு மணி நேரம் வெயில் வேண்டும். செடி எந்த அளவுக்கு வெயிலில் இருக்கிறது அவ்வளவுக்கு நல்லது. ஐந்து மணி நேரத்திற்கும் குறைவான வெயில் படும் இடத்தில் கீரை மாதிரி செடிகள் மட்டும் வைத்துக் கொள்ளலாம்.

வாரம் ஒரு முறை வளர்ச்சி ஊக்கிகள் (பஞ்சகாவ்யா, அரப்பு மோர் கரைசல், தேமோர் கரைசல், மீன் அமிலம்) எதாவது தெளித்து விடலாம். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை நீருற்றும் போது பஞ்சகாவ்யா கலந்து விடலாம்.

ஒரு சில செடிகளை சரியான பருவம் பார்த்து விதைப்பது நலம். கோடையில் காலி ஃப்ளவர் போட்டுக் கொண்டு போராடிக் கொண்டிருக்கக் கூடாது. சில செடிகள் சில சீசன்களில் காய்த்துக் கொண்டும் (நான் மார்ச்சில் விதைத்த புடலை இன்னும் காய்த்துக் கொட்டுகிறது. ஆனால் இதே புடலை நவம்பர் – டிசம்பரில் கொஞ்சம் திணறும். நிறைய பூச்சிகளும், புழுக்களும் நவம்பர்-டிசம்பரில் காயை சுரண்டி தின்று காலி செய்யும். இந்த கோடையில் அது போன்ற பிரச்சனைகள் ஏதும் இல்லை).

பொதுவாய் வீட்டுத் தோட்டத்தில் நாம் தொடக்கம் முதலே மேலே சொன்ன ஒவ்வொரு விசயத்தையும் எவ்வளவு சரியாக செய்து வருகிறோமோ அந்த அளவுக்கு செடிகள் நன்றாக வரும். இதில் எதாவது ஒன்றின் பிரச்னை செடியில் பூச்சி தாக்குதலாகவோ, நோய் தாக்குதலாகவோ, சத்து குறைவாகவோ வந்து முடியும். பொதுவாய் தோட்டத்தில் சத்துக் குறைவால் வளர்ச்சி குன்றிய செடியையோ, மஞ்சளாய் வெளிறி போன செடியையோ, நிறைய பூச்சி தாக்கிய செடியையோ மீண்டும் சரி செய்து விளைச்சல் எடுப்பது மிக கடினம். நேரத்தை வீணாக்காமல் அந்த செடிகளை நீக்கிவிட்டு புதிதாய் விதைப்பது நல்லது.

(தொடரும்)

18 thoughts on “தோட்டம் – கேள்வி-பதில் – Part-2

  1. FAQ மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நண்பருக்கு
    மிக்க நன்றி!

    Like

    • உங்கள் புதிய மாடித்தோட்டம் திட்டங்களை முடிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

      Like

  2. ஐயா

    தங்களின் சேவை மனப்பான்மையை பாராட்ட தமிழ் அகராதியில் வார்த்தைகள் இல்லை.

    நான் கடந்த மூன்று மாதங்களாக அரியலூரில் மாடித் தோட்டத்திற்க்க மிகவும் போராடிய நிலையில் தங்களின் வலை தளம் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.

    தங்களின்ஆலோசனை படி மண் கலவையினை 2 : 2 : 1 விகிதத்தில் மாற்றி இரு தினங்களுக்கு முன்அமைத்துள்ளேன்.

    இதில் எனக்கு கிடைத்த காய்ந்த நிலையில் உள்ள வேர்மிகம்போஸ்ட்னினை பயன்படுத்தியது சரிதானா என்று தயவு கூர்ந்து தெரியபடுத்துங்கள்.

    இந்த வேர்மிகம்போஸ்ட் – மண்புழு உரமானது நல்ல சிறிய துகள்களாக கடுகு / மணல் போன்று உள்ளது.

    தங்களின் மேலான ஆலோசனையை ஆவலுடன் எதிர்நோக்கும் அன்பன்

    Like

    • நன்றி நண்பரே. தனி மடலில் விவரம் அனுப்பி இருக்கிறேன். பாருங்கள். உங்கள் புதிய தோட்டத்திற்கு எனது வாழ்த்துகள்.

      Like

    • பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது குறித்து மகிழ்ச்சி வல்லமுத்து 🙂

      Like

  3. நல்ல பகிர்வு நன்றி…….. உங்கள் அனனத்து பகிர்வுகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன் வாழ்த்துகள்
    ( உங்களுக்கு மெயில் அனுப்ப வேண்டும் என்றால் எதில் அனுப்ப வேண்டும் ஏன் என்றால் இங்கு கொடுத்துள்ள மெயில் யில் அனுப்பினேன் அது சரியாக வந்ததா என்று தெரியவில்லை)

    Like

    • நன்றி மேடம்.

      எனக்கு உங்கள் மெயில் ஐடி எதில் இருந்தாவது thoddamsiva@yahoo.com என்ற மெயில் ஐடிக்கு மடல் அனுப்புங்கள்.

      Like

  4. நல்ல பகிர்வு நன்றி…….. உங்கள் அனனத்து பகிர்வுகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன் வாழ்த்துகள்தொ. டரட்டும் தங்கள் சேவை

    Like

  5. நண்பரே தக்காளி நாத்து போட்டு நடும் போது எனக்கு பிரச்சனை ஆகிவிடுகிறது உள்ளங்கை அளவுககு மேல் வளர்ந்த பிறகு எடுத்து வைத்தாலும் 2 ,3 நாட்களில் அது வாடி வதங்கி இறந்து விடுகிறது ஒன்று கூட வருவதற்கு சிரம படுகிறது மிக வருத்தமாக இருகிறது எப்படி ட்ரான்ஸ்பிளான்ட் செய்யவேண்டும் கலவையும் நீங்கள் சொன்ன மாதிரி தான் உபயோகிக்கிறேன்

    Like

  6. Very useful info. Just now got the details of the link. Will go through all your files Will seek,guidance as I have now started a small garden on a patch of land and also on a slightly better way a terrace garden with about 25 plants including vegetables and flowers in grow bags and some pots. Fortunately a lot of material not this is now available

    Like

Leave a comment