தோட்ட உலா – ஜூலை 2016

லேப்டாப் பழுதாகி போனதால் கடந்த இரண்டு வாரமாக புதிய பதிவுகள் ஏதும் எழுத முடியவில்லை. அதனால் இந்த பதிவு கொஞ்சம் தாமதமாகி விட்டது.

கடந்த ஞாயிறு ஒரு சொந்த வேலை காரணமாய் திடீரென்று சென்னை வர வேண்டியதாகி விட்டது. அதனால் என் வழக்கமான ஞாயிறு காலை அழைப்புகளை ஏற்க இயலவில்லை. சில நண்பர்கள் என்னை ஞாயிறு காலை அழைக்க முயற்சித்திருக்கலாம். மொபைல் Switch-Off என்று வந்திருக்கும். இதை தவிர்க்க இது போன்று தவிர்க்க முடியாத காரணங்கள் வரும் போது, அதை தோட்டம் தளத்தில் எனது தொடர்பு விவரங்கள் இருக்கும் பகுதியில் கூறி விடுகிறேன். என்னை ஞாயிறு அழைக்கும் முன் வெள்ளி-சனி கிழமைகளில் எனது தளத்தை ஒரு முறை பார்த்து விட்டு அழையுங்கள்.

அக்ரி இன்டெக்ஸ் 2016

agri-index-2016

கோவையில் இந்த வருடத்தின் விவசாய கண்காட்சி ‘அக்ரி இன்டெக்ஸ் 2016’, வருகிற ஜூலை 15  முதல் 18 வரை நடக்க இருக்கிறது ( அடுத்த வாரம், வெள்ளி முதல் திங்கள் வரை). கோவை மற்றும் கோவையை சுற்றி உள்ள நண்பர்கள் கண்டிப்பாக போய் பார்க்கலாம். தோட்டம் சம்பந்தமாக நிறைய பொருட்கள் கிடைக்கும். வழக்கமான வளர்ப்பு பைகள், விதைகள் என்பதை தவிர்த்து நர்சரி ட்ரேகள், தோட்டக் கருவிகள் (Pruning cutters, Sprayers etc), சில அரிதான விதைகள், எல்லாவற்றுக்கும் மேலாக நிறைய தகவல்கள் கிடைக்கும். நன்றாக தேடிப் பார்த்தால் நிறைய பொருட்களை மிக குறைந்த விலையில் வாங்கலாம் (முக்கியமாக தோட்டக் கருவிகள்). வழக்கம் போல கூட்டம் திருவிழா போல இருக்கும், முக்கியமாக மாடித் தோட்டம் என்று எதாவது எழுத்து கண்ணில் பட்டாலே அங்கே ஒரு கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். கொஞ்சம் நேரமும், நிறைய பொறுமையும் இருந்தால் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமை போவதை தவிர்க்கவும். நிறைய ஸ்டால்கள் முதல் நாளிலேயே வருவதில்லை. ஞாயிறு கூட்டம் அள்ளும். சனிக்கிழமை போவது நல்லது.

மாடித் தோட்டம் – SUN ROOF

மாடித் தோட்டத்தில் இந்த ஜூன்-ஜூலை சீசன் அமோகமாய் ஆரம்பித்து போய்க் கொண்டிருக்கிறது. நிறைய திட்டமிட்டு அமைத்தாலும் ஒரு முக்கிய விசயத்தில் கோட்டை விட்டிருந்தேன்.

நிழல்வலை அமைத்து ஒரு பூச்சி கூட உள்ளே வர விடாமல் அமைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று முதல் விளைச்சலே காட்டி விட்டது. நான் பின்னால் குடோன் அமைத்த இடத்தில் பெரிய இடைவெளி உள்ளது. அதன் வழியாக குருவிகள், அணில்கள் கூட உள்ளே வந்து போகும். அதன் வழியாக சில வண்ணத்துப் பூச்சிகள் உள்ளே வந்து பின்னர் வெளியே போக வழி தெரியாமல் திணறுகின்றன. நாள் முழுவதும் உள்ளேயே சிக்கி பாவமாய் நிழல் வலையை முட்டிக் கொண்டு வெளியே போக முயற்சிப்பதை பார்த்தால் ‘இந்த சுயநலம் நமக்கு தேவையா. நாமே இயற்கையை விட்டு விலகி நமக்கு மட்டும் விளைந்தால் போதும் என்று நினைப்பது தப்பாச்சே’ என்பது லேசாய் மண்டையில் உரைக்க ஆரம்பித்தது. நானும் சில நேரம் அவைகளை தோட்டம் முழுவதும் விரட்டி, கையால் இறக்கை சேதம் ஆகாமல் பொத்தி பிடித்து வெளியே விட்டேன். ஆனாலும் சில உள்ளேயே சிக்கி இறந்து போய் விட்டன. அதற்கு வினையாய் முதன் முதலாய் வைத்த தக்காளி செடிகளில் பூ நிறைய பூத்தாலும் எல்லாமே அப்படியே உதிர்ந்து விட்டது. ஒரு பிஞ்சி கூட வரவில்லை. இது வரை இந்த பிரச்சனை இருந்ததில்லை.

இதுவரை நான் பார்த்த நிழல்வலை அமைத்த மாடிதோட்ட படங்கள் எல்லாமே முழுவதும் கவர் செய்து தான் இருந்தது. எதிலுமே இந்த பிரச்னை பற்றி கூறவில்லை. எனக்கும் மகரந்த சேர்க்கை பற்றி, பூச்சிகளின் பங்கு பற்றி தெரிந்து இருந்தும் யோசிக்கவே இல்லை. ஆனால் நிறைய பேர் நிழல்வலை அமைத்தேன், ஆனால் சுத்தமாய் காய்ப்பே இல்லை, இப்போது எடுத்து விட்டேன் என்று கூற கேட்டிருக்கிறேன்.

நான் நிழல்வலை அமைத்த காரணம் காற்று பிரச்னை தான். அதனால் அப்படியே எடுக்கவும் முடியாது. முதலில் நுழைவு வாயிலில் ஒரு பகுதியை திறந்து விட்டேன். ஆனாலும் வண்ணத்துப் பூச்சிகள் வெளியேற மேலேயே தான் வழி இருக்கிறதா என்று முட்டி மோதி பார்க்கிறது. கடைசியில் தெற்குப்பக்கம் ஒரு ஐந்து அடி அகலத்துக்கு திறந்து விட்டு விட்டேன். அதனால் காற்றினால் எந்த பிரச்னையும் வருவதில்லை. பேய்க்காற்று அடித்தாலும் வெண்டை செடி கூட அசராமல் நிற்கிறது.

இந்த மாற்றத்திற்கு உடனே பலன் கிடைத்தது. வண்ணத்து பூச்சிகள் உள்ளே வந்து போகின்றன. எதுவும் உள்ளே மாட்டிக் கொள்வதில்லை. தக்காளி இப்போது நன்றாக காய்க்க ஆரம்பித்து விட்டது. பூச்சிகளும் பறவைகளும் வந்து போனால் தான் அது தோட்டம். ஏனோ மாடித் தோட்டம் திட்டமிடும் போது கோட்டை விட்டு விட்டேன்

tg1tg2tg3tg4

 

சிங்கபூர் விதைகள்

நமது சுற்றமும் நட்பும் எங்காவது வெளிநாடு சென்றால் வழக்கமாக நாம ஒரு பவுடர் டப்பாவோ, சென்ட் பாட்டிலோ கேட்போம். ரொம்ப நெருங்கிய சொந்தம் என்றால் எதாவது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மொபைல் என்று கேட்போம். நாம தான் எந்த கண்காட்சியில் விட்டாலும், பொருட்காட்சியில் விட்டாலும் எங்கடா அந்த விதை கடையை என்று அலைவோம். யாரவது ஊருக்கு போனேன் என்று கூறி ஒரு பாக்கெட் விதையையோ, ஒரு செடியையோ கொடுத்தால் அது ஒரு 50 இஞ்ச் LED TV வாங்கி கொடுத்த சந்தோசம் நமக்கு 😀

சமீபத்தில் நண்பர் ஒருவர் சிங்கபூர் போய் இருந்தார். வழக்கம் போல ‘வரும் போது ரெண்டு பாக்கெட் காய்கறி விதை இருந்தா வாங்கி வாங்க பாஸ். அதுவும் கத்தரி, தக்காளி என்று இல்லாமல் எதாவது வித்தியாசமா வாங்கி வாங்க’ என்று ஒரு வேண்டுகோளை வைத்தேன். அவரும் என்னைப் போல ஒரு தோட்டக்காரர் என்பதால் சரி என்றார்.

மொத்தம் மூன்று விதைகள் வாங்கி வந்திருந்தார். Tomato Yellow Pear, Winged Bean, Chinese Flowering Cabbage. அதில் விசேஷமாய் Winged Bean தெரிந்தது . விவரத்திற்கு விக்கிபீடியா பார்த்தபோது இது ஒரு கொடிவகை என்று தெரிந்தது. வேர் பகுதி முதல் இலை, பூ வரை அனைத்தும் உண்ணத் தகுந்தது என்று போட்டிருக்கிறது. நம்ம ஊர் காலநிலைக்கு செடி எப்படி வரும் என்று தெரியவில்லை. இருந்தாலும் இந்த ஜூலையில் விதைத்து பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

seed1seed2seed3

இந்த சிங்கபூர் விதைகளில் ஆச்சரிய பட்ட ஒரு விஷயம் அதன் காலாவதியாகும் நாட்கள். இதை பொதுவாக நம்ம ஊர் விதைகளில் ஆறு மாதம் முதல் அதிகபட்சம் ஒரு வருடம் கொடுத்திருப்பார்கள். ஆனால் சிங்கபூர் விதைகளில் கொடுத்திருந்த காலாவதியாகும் தேதி June-2021 (கிட்டதட்ட ஐந்து வருடம்). இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. முதலில் நம்ம ஊரில் முளைக்கிறதா என்று பாப்போம்.

இன்னும் ஒரு மாதத்தில் வகுப்பு தோழன் ஒருவன் அமெரிக்கா போகிறான். ‘மக்கா.. ஏதாவது வரும் போது வேணுமா’ என்று கேட்டான். ‘நான் என்னத்தல பெருசா கேட்ற போறேன். நேரே வால்மார்ட் அல்லது Home Depot போ. அங்கே Home Gardening section-ல பூ விதை பாக்கெட் கெடைச்சா ரெண்டு வாங்கிட்டு வா’ என்று சொல்லி வைத்திருக்கிறேன். நம்ம தோட்டத்துல இது சிங்கபூர் கத்தரிக்கா, இது அமெரிக்க வெள்ளரிக்கா என்று ரெண்டு செடி  நின்னா சந்தோசம் தானே 😀

காக்கா கூடு

இங்கே வீட்டை ஒட்டி தெருவில் நிற்கும் ஒரு பெரிய வேப்பமரத்தின் கிளைகள் கரண்ட கம்பி மேல் விழுவதால் வெட்ட சொல்லி EB போய் கம்ளைன்ட் கொடுத்திருந்தேன். போன வாரம் வந்து கிளைகளை வெட்டி விட்டார்கள். அதில் ஒரு கிளையில் கட்டி இருந்த காக்கா கூடு ஒன்றும் கீழே விழுந்து கிடந்தது (முட்டை, குஞ்சுகள் ஏதும் இல்லை. பழைய கூடு தான்).

கூட்டை எடுத்து பார்த்தல் ஆச்சரியம். கூட்டை வெறும் இரும்பு கம்பி கொண்டே கட்டி இருக்கிறது. நிறைய கெட்டு கம்பி நடுவில், அதை சுற்றி கனமான, அகலமான சில கம்பிகள் என்று கூடு செம கனம். கூட்டில் மருந்துக்கு கூட ஒரு மரக்குச்சி தென்படவில்லை. காக்கா கூட இப்போது ரொம்ப உறுதியாக கூடு கட்ட ஆரம்பித்து விட்டது போல. இனி சிமெண்ட் கான்கீரிட் எல்லாம் கலந்து கட்டினாலும் ஆச்சரியம் இல்லை. எந்த காலேஜில் இன்ஜினியரிங் படித்தது என்று தெரியவில்லை.

nest1nest2nest3nest4

இதை இன்னொரு கண்ணோட்டத்தில் பார்த்தால் பறவைகளுக்கு கூட கூடு கட்ட தேவையான குச்சிகள் கிடைக்காத அளவுக்கு நாம் மரங்களை வெட்டி நாசம் செய்து வைத்திருக்கிறோம். பொதுவாய் காக்கா கூடு கட்ட ஆரம்பித்தால் காய்ந்த சுள்ளிகள், குச்சிகள் என்று சேர்த்துக் கொண்டிருக்கும். ஆனால் இந்த கூட்டை பார்க்கும் போது அதற்கு கிலோ கணக்கில் இரும்பு கம்பிகள் தான் கிடைத்திருக்கிறது. இந்த கொடுமையை என்னவென்று சொல்ல.

Advertisements

30 thoughts on “தோட்ட உலா – ஜூலை 2016

 1. வணக்கம் sir ,
  எங்கள் thottathilum இது போல காக்கா கட்டு கம்பி உடன் வருவதை பார்த்து யோசித்து இருக்கிறேன்.
  ஆனால் இப்போது தான் புரிகிறது காக்கா வும் இயற்கை ஐ விட்டு தள்ளி போயிற்று என்பது.
  இது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

  Like

  • உண்மை தான் மேடம். இவ்வளவு கம்பிகள் அவைகளுக்கு எப்படி கிடைக்கிறது. அதுவும் ஒரே மாதிரியான கம்பிகள் என்பது ஆச்சரியம் தான். இனி தெருவில் பழைய பிளாஸ்டிக் பாட்டில், இரும்பு கழிவுகள் பொருக்குபவர்கள் காக்கா கூட்டை தேடி அலைந்தாலும் ஆச்சரியம் இல்லை. எப்படியும் ஒவ்வொரு கூட்டிலும் இரண்டு கிலோ இரும்பு கிடைக்கும் 😀

   Like

 2. Sir super. Sir coimbatore exhibition I cannot come. If u go can u check for natu seeds.nattu lemon plants. Flower seeds. And sprayers .

  Like

  • Long back i read your post sir, very useful and you felt bad for birds also updated their building knowledge. But its very dangerous to our future generation the reason is present people utilize everything more than they required.(from air to advance technology).

   Like

   • True Tamil. We need to educate the kids from school about the importance of nature and being part of the nature. Atleast parents should educate the kids on all these things.

    Like

 3. அருமை. அது இந்த காலத்து நவீன காக்கை.அதனால் அது இரும்பை பயன்படுத்தி உள்ளது.இயற்கையை மறந்து விட்டதோ?

  Like

  • ஆமாம் அண்ணா. இதுவும் கூரை விட்டில் இருந்து காங்க்ரீட் வீட்டிற்கு மாறுவது போல தான் போல 🙂

   Like

 4. வணக்கம் சிவா அண்ணா.. தாமதமா வந்தாலும் நல்ல பதிவு.. மொபைல்ல தான் படிக்கிறேன் , முகத்தை உர்ர்ன்னு வச்சுகிட்டு கூட படிக்கலாம்.. ஆனா படிக்கும்போதே நமக்கே தெரியாம சிரிச்சுகிட்டுதான் படிக்க வேண்டியதா இருக்கு…. யாராவது என்னை பாக்குறாங்களானு அப்புறந்தான் பாத்துகிட்டேன்… தோட்டம் மட்டுமில்லை எழுத்தும் அருமையா வருது உங்களுக்கு….. அக்ரி இன்டெக்ஸ் பற்றிய பதிவு அடுத்து எதிர்பார்க்கிறேன்…

  Like

  • நன்றி தம்பி. தாமதமாய் பதிவிட்டாலும் உடனே வந்து படித்து கருத்துகளை கூறி விடுகிறாய். நன்றி 🙂

   உன்னுடைய அக்ரி இன்டெக்ஸ் விசிட் பிளான் என்ன?. தோட்டம் மற்றும் உங்கள் குழு மீட்டிங் எல்லாம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது?

   Like

 5. வணக்கம் சிவா,

  எப்போது கேட்டாலும் கோவை யில் தான் “AGRI TEX” நடக்கிறது. சென்னை யில் நடக்க வாய்ப்பு இல்லையோ? கோவை மக்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் சொல்லவேண்டும். 🙂

  மாடி தோட்டம் அமைப்பவர்கள் எல்லோருமே இயற்கை மீது பற்று கொண்டவர்கள் என்று கூற முடியாது ஆனால் நீங்கள் இயற்கை மீது மிகவும் பற்று கொண்டவர் என்று பறவைகளுக்கு உங்கள் வீட்டிலேயே உறைவிடம் அமைத்ததிலேயே விளங்கியது. தங்களின் “sun roof” தொகுப்பு எல்லோருக்கும் ஒரு தெளிவு கொடுக்கும் படி உள்ளது. நன்றி.

  இங்கு சென்னையில் நாட்டு விதைகள் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. தற்பொழுது நான் “susi seeds” , “sakthi seeds” யில் இருந்து தான் விதைகளை வாங்குகிறேன் ஆனால் அது எல்லாம் hybrid வகை என்பதால் எனக்கு திருப்தி கரமாக இல்லை.

  அன்புடன்,
  மதன்
  தி. நகர்

  Like

  • நன்றி மதன்

   //கோவை மக்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் சொல்லவேண்டும்// உண்மை தான்.

   நான் இங்கே ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும் விதைகளை தான் பயன்படுத்துகிறேன். நன்றாகவே இருக்கிறது. நாட்டு விதைகள் இல்லாத காய்கறிகளை ஆன்லைன-ல் ஹைப்ரிட் விதைகள் வாங்கி கொள்கிறேன் (நூல் கோல் மாதிரி). சென்னையில் நாட்டு விதைகள் கிடைக்கவில்லை என்றால் மடல் அனுப்புங்கள் நான் ஏதும் உதவ முடியுமா என்று பார்க்கிறேன்.

   Like

 6. செடி கொடிகளை நேசிககும் எவரும் மற்ற இயர்க்கை விஷயங்களை எப்படி மறக்க மறுக்க முடியும் படடம்பூச்சியின் சிறகுகளுககு வழிவிட்டு விட்டுவிட்டிர்கள்
  காக்கா கூடு உண்மைதாங்க என் வீட்டிலும் அது கம்பியில்தான் காட்டியுள்ளது அது மட்டுமல்ல நான் புடலைககு பந்தல் கட்டுவதர்ககு வாங்கிய கம்பிகளையெல்லாம் எடுத்து போய்விட்ட்து தூக்க முடியாத பெரிய சுற்றியுள்ள கம்பிகளைகூட எடுத்து கொண்டு போய்விட்ட்து கட்டிட வை த்திருந்த கயிறுகள் கூட அதோடவிட்ட்தா பந்தலில் கட்டிய கம்பியை பிடித்து இழுகிறதுனா பாருங்களேன்
  காற்று சரி பெரிய மழைகளை எப்படி (இப்ப ரொம்ப மழை )சமாளிக்கிறீங்க ரொம்பவே செடிகள் அடிபடுகிறதே என்ன ஸெட்ப் கொடுக்கறீங்க மாடி தோட்டத்துககு

  Like

  • //நான் புடலைககு பந்தல் கட்டுவதர்ககு வாங்கிய கம்பிகளையெல்லாம் எடுத்து போய்விட்ட்து தூக்க முடியாத பெரிய சுற்றியுள்ள கம்பிகளைகூட எடுத்து கொண்டு போய்விட்ட்து கட்டிட வை த்திருந்த கயிறுகள் கூட அதோடவிட்ட்தா பந்தலில் கட்டிய கம்பியை பிடித்து இழுகிறதுனா பாருங்களேன்// உங்க ஏரியா காக்கா இந்த காக்காவை விட பெரிய ஆளாய் இருக்கும் போல. விட்டா வீட்டுக்குள்ள வந்து தட்டு பாத்திரம் எல்லாம் எடுத்து போய்விட போகிறது. பார்த்துக்கோங்க 🙂

   பெரிய மழைக்கு மாடித் தோட்டத்தை பொருத்தவரை எந்த பிரச்னையும் வருவதில்லை. பைகளில் செடிகள் இருப்பதால் செடிகள் சரியவோ, நீரில் மூழ்கவோ வாய்ப்பில்லை. தரையில் தான் பெருமழைக்கு சேதாரம் நிறைய இருக்கும். தக்காளி அப்படியே தரையில் சாய்ந்து போய்விடும். முடிந்த அளவுக்கு கம்பு எதாவது வைத்து கட்டிவிடுவது தான் ஒரே வழி. மழை பெய்து ஒரு வெயில் வந்ததும் ஓரளவுக்கு செடிகள் எழும்பி விடும்.

   Like

   • // உங்க ஏரியா காக்கா இந்த காக்காவை விட பெரிய ஆளாய் இருக்கும் போல. விட்டா வீட்டுக்குள்ள வந்து தட்டு பாத்திரம் எல்லாம் எடுத்து போய்விட போகிறது. பார்த்துக்கோங்க //

    நல்ல சிரிப்பு. வாய் விட்டு சிரித்தேன். நிழல் வலை பற்றிய தகவல் நல்ல தெளிவு. தொடருங்கள். விஜயன்

    Like

 7. Hi Siva,

  I was asking you the same Question to you about pollunation in Fully Covered Shaded net few months back. That is the problem with Fully Covered shaded net. What I feel about Shaded net is grow the plants which does not produce flowers like NoolKhol, Cabbage, Cauliflower, Beetroot , Greens etc.

  Sorry I am not disappointing you.

  Thanks,
  Ganesh

  Like

  • Yes Ganesh. You are right. I totally missed this while designing the top roof. Otherwise I could have planned some opening in the beginning itself. Now things are back to normal and now fruits coming as usual after this change.

   Like

 8. சிவா வணக்கம்,
  அருமையான பதிவு. I’m planning to start terrace gardening. My problem is I’m residing in an apartment. Next is here I can see hundreds of pigeons in our terrace. Give me a complete solution before I start.
  If I manage to arrange the bags in the parking area where we get sunlight till 12 noon, we have rodent problem… Pls suggest me a clear solution. During my younger age appa had a big garden with 80 pots where we have grown even beetroot and carrot. ( in madurai) I’m 100% interested.

  Like

  • Thanks Madam.

   pigeons in terrace is definitely going to add challenge in setting up terrace garden. They enjoy spinach and other leaves also and very difficult to grow plants with hundreds of pigeons. The only option would be to cover the garden with a sharenet arrangement.

   Sunlight till noon may not be sufficient to grow vegetable plants and will have a hit on the yield. Check if we can do something on the terrace

   Like

 9. Hi Siva, waiting for your posting. Iam in Madipakkam, planning to visit your garden & Agri Intex too this time, Iam waiting for this so many years. I have some 4 days course in Coimbatore this week end. I sent you detailed mail,pls check & reply. Iam planning to start Terrace garden, would be very helpful for me after meet you, i need your guidance too. My mobile no 9952063853, I need to buy some garden tools & seeds from agri intex,you can help me what yo buy. Rgds —– Rajesh.

  Like

 10. வணக்கம் சிவா,

  “காக்கா கூட இப்போது ரொம்ப உறுதியாக கூடு கட்ட ஆரம்பித்து விட்டது போல. இனி சிமெண்ட் கான்கீரிட் எல்லாம் கலந்து கட்டினாலும் ஆச்சரியம் இல்லை. எந்த காலேஜில் இன்ஜினியரிங் படித்தது என்று தெரியவில்லை.”

  மேலே உள்ள வாக்கியங்களில் உங்களின் நகைசுவை கலந்த எழுத்தாற்றல் தெரிகிறது.

  இங்கு சென்னை – பழவந்தாங்கல் ரயில்வே ஸ்டேஷன் கூரைகளில் கூட சில காக்கைகள் கட்டு கம்பிகளால் கூடு கட்டியுள்ளது. இதை பார்க்கும் போது நீங்கள் எழுதிய “எந்த காலேஜில் இன்ஜினியரிங் படித்தது என்று தெரியவில்லை.”
  என்பது தான் நினைவுக்கு வருகிறது.

  தோட்ட கலை மட்டுமன்றி உங்களின் எழுத்து ஆற்றல் கூட அருமை.

  நன்றி
  ரமேஷ்

  Like

  • நன்றி ரமேஷ். எல்லோரும் சொல்லுவதை பார்த்தால் காக்கா இப்போது கம்பியில் தான் கூடு கட்டுகிறது. இது கூட பரிணாம வளர்ச்சி தான் போல 🙂

   Like

 11. வணக்கம் ஐயா நான் ஞாயிற்றுக்கிழமை கொடிசியா வந்திருந்தேன் ஏகப்பட்ட கூட்டம் நர்சரி ட்ரே சிறிய குழி தான் இருந்தது பெரியது இல்லை 5 மணிநேரம் சுற்றிபார்த்து விட்டு வந்து விட்டேன சேலத்தில் எங்கேயாவது கிடைக்குமா

  Like

  • ஆமாம் சுரேஷ். நானும் சுற்றி பார்த்தேன். ஐம்பது குழிகள் கொண்ட தட்டுகள் கிடைக்கவில்லை. சனிக்கிழமை போன போது சிலர் வாங்கி இருந்தார்கள். சுபிக்க்ஷா ஆர்கானிக் வேண்டுமென்றால் அழைத்து பேசி பாருங்கள் (94433 83797 or 94422 12345)

   Like

 12. I just went through your blog! Your writing skills are wonderful . Just love it.
  So many useful informations. Would like to visit your garden soon. Do you compost vegetable waste too.
  Any easy method that you suggest?’thanks regards

  Like

 13. Siva sir,
  inspired by ur garden last month i started my terrace garden with 5 bags. Sir i have few doubts to groww papaya n gova what size bag to use.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s