தோட்டம் 2.0 (பகுதி-4)

எனக்கு வீட்டை சுற்றி வெயில்படும் இடத்தில் எல்லாம் ஏதாவது ஒரு செடியோ, மரமோ இருக்க வேண்டும். நான் இப்போது தோட்டத்தில் செய்யும் மாற்றங்களை பார்த்து, நடக்கவாவது கொஞ்சம் இடத்தை விட்டு வையுங்க என்று கொஞ்சம் கலவரத்துடன் வீட்டில் சொல்லி வைத்தார்கள். வீட்டில் கார் விடும் இடம் கிட்டத்தட்ட பத்து அடி அகலமும், முப்பது அடி நீளமும் இருக்கிறது. கார் வெயிலில் நிற்பதால் மேலே மெட்டல் சீட் போட்டு ஒரு கார் பார்க்கிங் செய்யலாமா என்று ஒரு யோசனை இருந்தது. அப்படி செய்தால் காருக்கு கிடைக்கும் நிழலை தவிர வேறு ஏதும் பயன் இராது. கொஞ்சம் செலவு செய்து ஒரு கான்கிரீட் தளம் ஓன்று போட்டு, அதன் மேலே இன்னொரு தோட்டம் கூட போடலாம் என்று தோன்றியது. நிறைய செலவு ஆகும். தவிர வீட்டின் அழகு சுத்தமாய் போய் விடும். அதனால் இந்த முந்நூறு சதுர அடி பரப்பளவில் கொடி விட ஒரு பந்தல் ஒன்று அமைத்தால் அழகாய் சில கொடிகளை படர விடலாம் என்று தோன்றியது. மாடியில் அமைத்த கட்டமைப்போடு இதற்கும் உறுதியாக தூண் எழுப்பி நிறைய அகலம் இருக்குமாறு கம்பியில் சட்டம் அமைத்தோம்.

வெறும் கம்பியில் பந்தலும் அமைத்தால் அதன் சூட்டில் கொடி பாதிக்கும். முதலில் துரு பிடிக்காத அலுமினியம் கம்பியில் வலை மாதிரி பின்னி, அதை சுற்றி பிளாஸ்டிக் வயர் போல சுற்றி வலை கிடைக்கிறது. அதை போடலாம் என்று அதை தயாரிக்கும் ஒரு கம்பெனியை போய் பார்த்தோம். இந்த வலைகளை சிலர் வீட்டை சுற்றி தோட்டத்திற்கு வேலி போல அமைக்கிறார்கள். விசாரித்ததில் தண்ணீர் பட பட மேலே உள்ள பிளாஸ்டிக் உரிந்து போய் கம்பி வெளியே தெரிய ஆரம்பிக்கும். அதன் சூடு கொடியை பாதிக்கும் என்றார்கள். இந்த பந்தல் அமைப்பதில் கருத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் அருகில் உள்ள தென்னை. மேலே இருந்து தேங்காய் விழுந்தாலும் கீழே காரின் மேல் படாமல் தாங்க வேண்டும். மரச்சட்டம் கொண்டு செய்தால் தேங்காய் உயரத்தில் இருந்து விழுந்தால் சட்டம் உடைந்து விடும்.

யோசித்ததில் கடைசியில் மூங்கில் கொண்டு பந்தல் அமைக்கலாம் என்று முடிவு செய்தோம். மூங்கில் கொஞ்சம் விலை அதிகம் தான். ஆனால் பல வருடங்களுக்கு கிடந்தாலும் இத்து போகாது. என்ன விழுந்தாலும் அவ்வளவு எளிதாய் உடையாது.

இங்கே கோவில்பாளையம் அருகே சில கடைகளில் மூங்கிலில் செய்த தட்டி (சுற்றி வேலி மாதிரி வைக்க) பார்த்திருக்கிறேன். அங்கே சென்று விசாரித்து நமக்கு தேவையான அளவுக்கு மூங்கிலில் பந்தல் போல செய்து தர ஒரு ஆளை தேடி பிடித்தேன். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தார் (ஆனால் அதிகாலையிலேயே முழு போதையில் இருந்தார்). கொஞ்சம் வயதானவர். வேறு ஆள் கிடைக்காததால் அவரையே வைத்து செய்யலாம் என்று கூட்டி வந்து அளந்து பார்த்து எத்தனை மூங்கில், எவ்வளவு கூலி என்று பேசி முடித்தேன். மூங்கில் முழுதாக எடுத்து அதை பிளந்து தப்பையாக மாற்றி பந்தல் அமைக்க வேண்டும்.

மூங்கில் ஒவ்வொன்றும் விலை ரூ.250 ஆகிறது. கிட்டதட்ட 25 மூங்கில் தேவைபட்டது. அவர் கையில் அவ்வளவு பணத்தை கொடுக்க பயந்து அவரை கூட்டிக் கொண்டு இங்கே காரமடை போய் நானே வாங்கி வந்தேன். மூங்கிலை போட்டு விட்டு ஒரு நூறை வாங்கி கொண்டு போனவர் தான், ஒரு வாரமாய் காணமல் போய்விட்டார். கடுப்பில் அவர் வீட்டிற்கே போய் பார்த்து, ஒரு வழியாய் இரண்டு வாரம் இழுத்து முடித்து கொடுத்தார். மேலே செய்த அவ்வளவு பெரிய வேலைக்கு கூட அவ்வளவு எளிதாய் முடிந்தது. ஆனால் இந்த சின்ன வேலையை முடிப்பதற்குள் ஒரு வழி ஆக்கிவிட்டார். மூங்கில் மொத்தம் ரூ. 6500, கூலி ரூ. 3500 என்று மொத்தம் பத்தாயிடம் ஆகிவிட்டது. நிறைய மூங்கில் மிச்சம் இருந்ததால் மாடித் தோட்டத்திற்குள் ஒரு பந்தல், கீழே புடலை படர ஒரு பந்தல் என்று கூடுதலாக சிலவற்றுக்கும் பயன்படுத்திக் கொண்டேன்.

பந்தல் முடிந்ததும் தயாராக இருந்த திராட்சை கொடியை அதன் மேல் விட்டேன். அதுவரை சுமாராய் வளர்ந்து கொண்டிருந்த கொடி அழகாய் ஒரு பந்தல் கிடைத்ததும் ஜெட் வேகம் எடுத்து நாலா பக்கமும் படர்ந்து, மொட்டும் வைத்து விட்டது. கூடிய சீக்கிரம் பந்தல் முழுவதும் படர்ந்து கீழே முழுவதும் நிழல் கிடைத்து விடும். இந்த மூங்கில் அமைப்பில் வீடு இன்னம் கொஞ்சம் அழகாய் தெரிகிறது.

12345678910

 

சிட்டு குருவிகளுக்கு அரிசியும், நீரும் வைக்கும் இடம் இந்த கோடைக்கு மிகவும் சூடாகி விடுகிறது. அதனால் கையோடு அதற்கும் சின்னதாய் ஒரு கட்டமைப்பு செய்து பந்தல் ஓன்று அமைத்து விட்டேன்.

sp1

 

கடைசியாய் தோட்டம் அல்லாத இன்னொரு மாற்றமும் செய்தேன். தென்னைக்கு கீழே கலர் மீன்களுக்கான ஒரு பெரிய தொட்டி. எனக்கு அக்வேரியம் மேல் பள்ளி படிக்கும் போதில் இருந்தே நிறைய ஆர்வம் உண்டு. எனது பள்ளித்தோழன் வீட்டில் எங்கு பார்த்தாலும் கலர் மீன் தான் வளர்த்து கொண்டிருப்பான். வீட்டில் உள்ள கிணற்றில் கூட இறங்கினால் நம்மை சுற்றி கூட்டமாய் கலர் மீன்கள் நீந்தும். அவனிடம் சில மீன்கள் வாங்கி, அம்மாவிடம் கெஞ்சி வீட்டில் உள்ள சிமெண்ட் தொட்டியை நானே இரண்டாக பிரித்து ஒன்றை அக்வேரியம் ஆக்கி வைத்திருந்தேன். பன்னிரண்டு பரிட்சைக்கு படிக்கும் போது அந்த அக்வேரியம் அருகில் உட்கார்ந்து படித்து கொண்டிருப்பேன். மீன்கள் நீந்துவதையும், அவைகளின் செய்கைகளை பார்த்துக் கொண்டிருந்தாலே மனசுக்கு நிறைய சந்தோசமாய் இருக்கும். எனக்கு கண்ணாடி தொட்டிகளில் கலர் மீன் வளர்ப்பது பிடிப்பதில்லை. அவைகள் கண்ணாடியை முட்டிக் கொண்டு பாவமாய் தெரியும். கூண்டில் பறவையை வளர்ப்பது மாதிரி தான் அதுவும். பெரிய சிமெண்ட் தொட்டி (குறைந்தது 1000 லிட்டர் கொள்ளளவு உள்ள) கட்டி, அதில் இயற்கையாய் பாசி, செடிகள், சின்ன சின்ன மறைவிடம், பாறைகள் என்று அமைத்துஅதில் மீன்களை விட்டாலே அழகு தான். மனசு சோர்வாய் இருக்கும் போது அந்த மீன்களை பார்த்துக் கொண்டிருந்தாலே மனசு உற்சாகமாய் விடும்.

வீட்டின் பின்னால் 500 லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு கலர்மீன் தொட்டி ஒன்று இருந்தது. அதை இன்னும் பெரிதாய் 1000 லிட்டருக்கும் கொஞ்சம் கூடுதலாய் உள்ளது மாதிரி ஒரு தொட்டியையும் கட்டி விட்டிருக்கிறேன். மீன்கள் இப்போது ரொம்ப சுதந்திரமாய் சுற்றுகிறது. மூன்று Dust Bin வாங்கி நானே ஒரு பெரிய பில்ட்டர் செய்து விட்டேன். மீன் தொட்டியை கழுவும் போது நீரை செடிகளுக்கு விட்டு விடுவோம். மீன் கழிவுகள் செடிகளுக்கு நல்ல சத்தாகும்.

a1a2a3a4a5

 

தோட்டத்திற்கும் அக்வேரியத்திற்கும் சம்பந்தம் ஒன்று இருக்கிறது. அது தான் aquaponics. ஹைட்ரோபோனிக் (hydroponics) பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். திட ஊடகம் எதுவும் இல்லாமல் நீரிலேயே செடிக்கு தேவையான சத்துக்களை (இரசாயன உர கலவைகள் தான்) மோட்டர் கொண்டு சுழற்சி முறையில் செலுத்தி செடி வளர்ப்பது. இது முழுக்க இரசாயன முறை. அதனால் இதை முயற்சிக்க பெரிதாய் யோசிக்க வில்லை. Aquaponics முறை என்பது இந்த இரசாயன கலவைக்கு பதில் மீன் தொட்டியில் உள்ள நீரை பயன்படுத்தி செடி வளர்ப்பது. மோட்டார் மூலம் சுத்திகரிக்க filtering unit கொண்டு செல்லும் முன் இந்த aquaponics சிஸ்டத்திற்கு அனுப்பினால் போதும். அந்த நீரில் இருக்கும் ஊட்டசத்திலேயே செடி அருமையாக வளரும் என்கிறார்கள். இதை பெரிய அளவில் கமர்ஷியலாக கூட செய்கிறார்கள். நாமே கொஞ்சம் PVC Pipe வாங்கி DIY Kit மாதிரி செய்து பார்க்கலாம். ஆனால் இப்போதைக்கு இதை செய்து பார்க்கும் திட்டம் இல்லை.

ap

சென்னையில் மடிப்பாக்கத்தில் அப்பார்ட்மெண்டில் இருந்த போது எனது மாடித் தோட்டம் இது தான். தோட்டம் வைக்க ஆசையில் வீட்டு ஓனரிடம் அனுமதி வாங்கி, பக்கத்து நர்சரியில் நான்கு சிமெண்ட் தொட்டி வாங்கி வளர்த்த வெண்டை செடிகள் தான் தோட்டம் 1.0 எனலாம்.

c1c2

 

இங்கே கோவை வந்த பிறகு இப்போது இந்த தோட்டம் 2.0. இது தான் எனது கனவு தோட்டம் என்றால், இல்லை. ஒரு அரை ஏக்கரில் (50 சென்ட்) சின்னதாய் ஒரு வீடு, சுற்றி என்ன என்ன மரங்கள் வேண்டுமோ அத்தனையையும் வைத்து, எல்லா காய்கறிகளையும் போட்டு நாங்களே அதை மொத்தமாய் நிர்வகிக்க வேண்டும். மூன்று மா மரம், பலா மரம் ஓன்று, எல்லா வகை வாழை இப்படி எல்லாம் வளர்க்க வேண்டும். நிறைய குருவிகளும், பறவைகளுமாய் அந்த தோட்டம் எந்நேரமும் சத்தமும் சந்தோசமுமாய் நிறைந்திருக்க வேண்டும்.

என்னை நிறைய யோசிக்க வைக்கும் ஒரு விஷயம், கடந்த ஒரு வருடமாக ஊரில் எங்கள் வீட்டில் இருக்கும் சிறிய மாமரம் இரண்டில் நூற்றுக் கணக்கில் சிட்டுக் குருவிகள் வந்து தங்குகின்றன. மாலை ஆறு மணி ஆகிவிட்டால் கூட்டமாய் எல்லா திசைகளிலும் இருந்து குருவிகள் வீட்டை சுற்றி வட்டமடித்து, மொத்தமாய் மாமரத்தில் போய் அடைந்து கொள்கின்றன. நிச்சயம் இருநூறு குருவிகளாவது இருக்கும். கொஞ்ச நேரம் தோட்டம் அதகளம் ஆகிவிடும். எல்லாம் அவைகளுக்குள் பேசி முடித்து, தூங்க இடம் பிடித்து , அவைகள் ஜோடியாய் தூங்கும் அழகே தனி. ஒரு அரை மணி நேரத்தில் எல்லாம் அமைதியாகி விடும். காலை ஐந்து மணி அளவில் மீண்டும் அதே சத்தம். கொஞ்ச நேரத்தில் எல்லாமும் அன்றைய பொழுதை துவங்க பறந்து போய் விடுகிறது. மீண்டும் மாலையில் சரியாக திரும்பி வந்து விடுகின்றன. சில குருவிகள் மட்டும் அங்கே தோட்டத்திலேயே சுற்றிக் கொண்டு, வீட்டின் உள்ளேயே வந்து அரிசி சாப்பிடுவது என்ன , அம்மா காப்பி குடிக்க உட்கார்ந்ததும் அவர்களிடம் அருகிலேயே வந்து பிஸ்கட் வாங்கி சாப்பிடுவது என்ன. அழகு.

ஊரை சுற்றி நிறைய தோட்டம் இருந்தும், நிறைய மரங்கள் இருந்தும் அவைகள் நம்மை சுற்றியே ஏன் வருகிறது?. அவைகள் நம்மை சார்ந்தே வாழ விரும்புகின்றன என்பதே உண்மை. செல்போன் டவரால் தான் சிட்டுக் குருவிகள் அழிந்து வருகிறது என்று சப்பை கட்டு கட்டிவிட்டு எளிதாய் நமது வேலையை பார்க்க போய் விடுகிறோம். ஒவ்வொன்றுக்கும் நமக்கு நாமே ஒரு நியாயம் வைத்திருக்கிறாம். சொட்டு மழை நீர் கூட நிலத்தில் விழாமல் பார்த்து வீடுகட்டி விட்டு ‘மழை சரியா பெய்வதில்லை’ ‘அரசாங்கம் சரியா தண்ணீர் விடுவதில்லை’ என்பதில் இருந்து ‘விசமில்லா உணவு வேண்டும். ஆர்கானிக் காய்கறி வேண்டும்’ என்பது வரை அவரவருக்கு என்று ஒரு நியாயம் இருக்கிறது. இதில் இருந்து கொஞ்சமாய் ஒதுங்கி, குருவிகள், பறவைகள் என்று இயற்கையோடு இணைந்த ஒரு தோட்டம் எனது ஆசை. அது தான் தோட்டம் 3.0, என் கனவுத் தோட்டம்.

கடவுள் அருளால் இந்த அளவுக்கு இடம் இதே கோவையில் இந்த வருடம் மாடித் தோட்டம் வேலை போய்க் கொண்டிருந்த போதே வாங்கி போட்டிருக்கிறேன். இன்னும் பத்து வருடம் கழித்து நானும் எனது தோட்டமும் அங்கே இன்னொரு தடத்தில் பயணித்துக் கொண்டிருப்போம் 🙂

(முற்றும்)

40 thoughts on “தோட்டம் 2.0 (பகுதி-4)

  1. மீண்டும் வாழ்த்துக்கள் நண்பரே,
    புதிய தோட்டத்தில் சிறிய வண்ண மீன் குளத்தையும் முடிந்தால் ஒரு குட்டி ரோஜாத் தோட்டத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் (என் கனவு).

    Like

    • சின்ன வண்ண மீன் குளம் நல்ல ஐடியா. மனதில் வைத்துக் கொள்கிறேன் 🙂

      ரோஜா தோட்டமும் இன்னும் சில மலர்களும் கொண்டு ஒரு சிறிய தோட்டம் அமைத்தால் அழகு தான். எனது பட்டியலில் சேர்த்துக் கொண்டேன் 🙂

      Like

  2. Hello Siva. Mudhalil ungal kanavu ninaivaga enadhu vazthukal. Iyarkayodu othu vazvadhu nijamagave kodi sugam. Great dedication.

    Madiyil shade net amaika yosikum pozhudhu UV stabilised nylon net patri oru video parthen. Savuku payanpaduthi sattam pottu nettal cover seidhu pandhal amaithirundargal. (Net 3varudam thangumam) Shade net requirement thavirthu adhe palanai peralam engirargal. Ungaladhu suggestions share pannungalen.

    Like

  3. Thanks Madam.

    Regarding nylon net, நிழல் வலைக்கும், nylon net அமைப்பதற்கும் என்ன வித்தியாசம் என்று கூற முடியுமா? விலை குறைவாக ஆகுமா? இல்லை வேறு ஏதும் நன்மை இருக்கிறதா?

    எனக்கு இந்த மொத்த மாடிக்கும் நிழல்வலை அமைக்க செலவு Rs.2000 தான் ஆனது. அதுவும் மூன்று – ஐந்து வருடம் வரை உழைக்கும் என்று தான் கூறுகிறார்கள்.

    Like

  4. Best wishes for your future plan. When we wish to help somebody else (whether humans or other living things), God will surely show the way and all do the needful. So don’t bother about anything, keep going, you will get everything.

    Try to grow some herbs which we used as medicines traditionally. I feel that we are loosing the knowledge of medicine through food of our grannys. Please see the blog mooligaivazam-kuppusamy.blogspot.com for more ideas.

    All the best.

    Like

    • Thanks Madam.

      I do have some basic herbs like Thulasi, Katralai, Thuthuvalai. But need to add more rare herbs in future. Medicine wise we still avoid any English medicine and only the traditional paddi vaithiyam only (Kashayam etc).

      Will check the blog that you have given.

      Like

  5. Mikavum nandri ungal blog padithuthan naan katthukitu maadi thottam poda aarambichiruken.ippa athil kai paarkum pothu rombavum santhosama irukirathu.antha sonthosam ellam ungaloda share pannika naanum nanri solren.rombavum ubayogama iruthuchi ungaloda valai pathivu enaku thottam poda.

    Like

    • நன்றி மேடம். உங்கள் புதிய தோட்டத்திற்க்கு வாழ்த்துகள். ஏதும் விவரம் தேவைபட்டால் எனக்கு ஒரு மெயில் அனுப்புங்கள்.

      Like

  6. வணக்கம் சிவா,

    மற்றுமொரு பதிவு எங்களுக்கு அளித்து என்னை போன்றவர்களுக்கு நீங்கள் ஒரு தோட்டகலை பல்கலைகழகம் ஆக திகழ்கிறீர்கள்! 🙂 மீன் தொட்டி மிகவும் அருமை. இயற்கை மீது நீங்க வைத்திருக்கும் அன்பு போற்றுதலுக்குரியது! நன்றிகள் பல!

    அன்புடன்,
    மதன்
    தி. நகர்.

    Like

  7. பணம் தேடுதலும்,ஆடம்பரம் செய்தலுமாக வாழும் இயந்திர, மனிதம் மறந்த கூட்டத்திற்கு

    மத்தியில் ” ஒர் உயிர்தன்மை அதுவே உயர்தன்மை” என பறைசாற்றுகிறீர். உண்மையை

    உரக்க உரைக்கின்றீர். நன்றி ஐயா.

    //என்னை நிறைய யோசிக்க வைக்கும் //……என ஆரம்பித்து.. \சொட்டு மழை நீர் கூட

    நிலத்தில் விழாமல் பார்த்து வீடுகட்டி விட்டு ‘மழை சரியா பெய்வதில்லை’ ‘அரசாங்கம் சரியா

    தண்ணீர் விடுவதில்லை’\ என நீங்கள் பகிர்ந்த விசயங்கள் சிந்திக்கவேண்டியவை.

    இயந்திரங்களுக்கு மத்தியில் மற்றுமொரு இயந்திரமாக வாழும் சோம்பேரி, மனிதனெனும்

    உயிரினம் உயிர்பெற இன்னும் சற்று உரக்கக் குரல் கொடுங்கள்.

    உங்களின் இந்த சிறந்த செயல்பாட்டிற்கும்,உழைப்பிற்கும் நன்றிகள்,மற்றும்

    நல்லாரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன்வாழ இயற்கையண்ணையின் சார்பில்

    நல்வாழ்த்துக்கள்.

    Like

    • என்ன.. ஐயா என்று சொல்லி விட்டீர்கள் அக்கா 🙂

      உங்கள் வார்த்தைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

      //ஒர் உயிர்தன்மை அதுவே உயர்தன்மை// உண்மை தான். இன்றைய சமுதாயம் மொத்தமாய் ஒரு வேகம் எடுத்து ஒரு இலக்கே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கே போய் முடியுமோ என்று சில நேரம் பயமாய் கூட இருக்கிறது. யாருக்கும் கனவு காண கூட நேரம் இல்லை. வேகம், வேகம்.. அதே நேரத்தில் சோம்பேறி தனம். நமது முன்னோர்கள் கற்றுக் கொடுத்த வாழ்க்கை காணமல் போய் கொண்டிருக்கிறது. ம்ம்ம்

      Like

  8. Dear Siva

    I meet another BHARATHI WHO DREAMS KANI NILAM in your beautiful words. There is no words to write about your hard

    work. Realy great. God bless you and your sweet family and your DREAMLAND. BEST WISHES S. MALLIGA.

    Like

    • ரொம்ப மிகைப் படுத்தி சொல்லிவிட்டீர்கள 🙂 . எல்லோருக்கும் சொந்தமாய் ஒரு வீடு வேண்டும் என்று ஆசை இருக்கிறது. நான் கொஞ்சம் இடமும் வேண்டுமென்று நினைத்திருக்கிறேன் 🙂

      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

      Like

  9. Dear Siva,
    i really appreciate your efforts……rasanai ya iruku unga valkai murai………evalavuu porumaiya oru meenthotiku enna vishayam venum nu yoshichu irukeenga…… kuruvikala evaalavu alaaga rasikureenga…… valkai rasithu valvatharke endru rasithu valringa nanbare….. wish you all the best for your future dreams……

    Like

    • நன்றி நண்பரே. நாம் இயற்கைக்கு எவ்வளவு நெருக்கமாய் இருக்கிறோமோ அவ்வளவு நன்றாய் நமது வாழ்க்கை அமையும் என்று நம்புபவன் நான். அதற்குரிய வாய்ப்புகளும் இங்கே கிடைத்ததால் நான் நினைத்ததை செய்ய முடிகிறது. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி

      Like

  10. வணக்கம் சிவா அண்ணா,
    புதிய தளம் அமைத்த பிறகு ஒரு முறை தளத்தை பார்த்தேன். அதன் பிறகு இப்போதுதான் பார்க்க நேரம் கிடைத்தது . இவ்ளோ காசு செலவு பண்ணியும் இவ்ளோ மெனக்கெட்டும் யாராவது தோட்டம் போடு வாங்கலன்னு என்னக்கு தெரியல.. ரொம்ப ஆத்மா திருப்தியோட செஞ்சுட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள்.. உங்க மேல இருக்க மரியாதையை கூடிகிட்டே போகுது. திராட்சை நல்லா வருதுங்கலா.. என்னக்கும் ஆசை தான்.. எப்போது வைத்தால் வரும்.. விதை குச்சி ஏங்கே கிடைக்கும். அதை பற்றிய தகவல் இருந்தால் அனுப்பவும்.. தக்காளி, மிளகாய் அறுவடை முடித்து அடுத்த நடவுக்கு தயாராக இருக்கிறது. இப்போதைக்கு கொத்தமல்லி ,சிறுகீரை மட்டும் இருக்கிறது.. வெயில் ரொம்ப அதிகம், கடுமையான நீர் பற்றாக்குறை அண்ணா. பாசிபயறு ஒரு ஏக்கர் அளவு கருகி போனது. புதிய முயற்சியாக பெர்ம்மாகல்ச்சர் முறையில் ஒரு சிறிய தோட்டம் அமைக்கலாம் என்று யோசனை. தங்களுக்கு தெரிந்த தகவல்களை சொல்லுங்க. தங்களுடைய புதிய முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் அண்ணா.

    Like

    • நன்றி மனோஜ். உங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி.

      திராட்சை நன்றாக வருகிறது. நிறைய பூக்கள் கோடை வெயிலுக்கு கருகி போய்விட்டது. இப்போது ஒரு மூன்று கொத்துகள் நன்றாக பிஞ்சி பிடித்து வந்து கொண்டிருக்கிறது. திராட்சை செடிகள் நர்சரியிலேயே கிடைக்கும். நான் எங்கள் கிராமத்தில் சந்தையில் உள்ள ஒரு சிறிய நர்சரியில் இருந்து வாங்கி வந்தது தான். லோக்கல் நர்சரியில் கேட்டு பாருங்கள். இல்லாவிட்டால் கூறுங்கள்.

      பாசிபயறு கோடையில் கருகி போனது வருத்தமாய் இருக்கிறது. ஒரு வீட்டு தோட்டக்காரனாய் எனக்கு பெரிதாய் பாதிப்பை உணர முடியாது என்றாலும், நீங்கள் ஒரு விவசாயியாய் சந்திக்கும் சவால்கள் நம் நாட்டில் ஒவ்வொரு விவசாயியும் படும் கஷ்டங்கள் தான். இந்த சவால்களிலும் நமக்கு சோறு கிடைக்க உழைக்கும் விவசாயிகள் போற்ற படவேண்டியவர்களே. பயறு கருகியது வெயிலினாலா இல்லை நீர் பற்றாகுறையுமா?

      பெர்ம்மாகல்ச்சர் முறை பற்றி தெரியவில்லையே மனோஜ். அது என்ன?

      Like

  11. You have done a fantastic job Siva.All the best for your dream. I would like to come and see your new arrangement of the terrace garden. Last time when we visited your garden you were talking about the shade net. Now you have finished it. Well done.

    Like

    • Sure Madam. Thanks for your wish. We will plan a garden visit sometime around July when I will have some good amount of plants in terrace.

      Like

  12. உங்களுடைய தோட்டம் மிக அருமை நீங்கல் தான் எங்களுக்கு inspiration , blog எல்லாம் படித்துவிட்டேன் மிக உபயோகமாக இருக்கிறது

    என்னுடைய முதல் ப்ராஜெக்ட் failure
    நான் மார்ச் மாததில் 20 தொட்டி 2000 என்று வாங்கினேன் செம்மண்ணில் விதை விதைத்து கொடுத்தார்
    பூசனிக்காய் செடி பூச்சி தாக்குதலால்
    பிடுங்கி எறிந்தேன் மற்றும் வெண்டை
    காய் விட்டது ஆனால் கெட்டி தன்மை யாக உள்ள்ளது , தக்காளி செடி முழுவதும் பூச்சி தாக்குதல் நீங்கள் சொன்னது போல் அக்கா மாலா தெளித்தேன் இன்னும் போராடிக்கொண்டு இருக்கிறேன்
    வீட்டில் – ஏன் வெட்டி வேலை என்கிறார்கள்.
    சுபிக்ஷா ஒர்கனிக் சென்று பச்சை பை
    8 மற்றும் விதையும் வாங்கினேன்
    நீங்கள் சொன்ன மாதிரியே செய்துள்ளேன் பார்க்கலாம்
    நேற்று காலை 9 மணிக்கு TNAU சென்று உரம் 10 கிலோ வாங்கினேன்
    பிறகு 4 மணிக்கு சென்று horticulture
    சென்று do it yourself kit வங்கினேன்
    இன்று தான் எல்லாம் கலந்து வைத்துள்ளேன் அடுத்த வாரம் தான் செடி நடவேண்டும்
    do it yourself kit பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன

    Like

    • விரிவான கமெண்ட்க்கு நன்றி நண்பரே. உங்கள் புதிய முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்.
      இப்போது do it yourself kit கோவையில் கிடைக்கிறதா? உடனே கொடுக்கிறார்களா அல்லது முன்பே பதிவு செய்ய வேண்டிய இருக்கிறதா?

      10 கிலோ உரம் போதுமா என்று தெரியவில்லை. இன்னும் மண்புழு உரம் தேவைப்படும். நான் கொடுத்திருக்கும் வீடியோ-வை ஒரு முறை பாருங்கள்.

      Like

  13. சிட்டு குருவிகளுக்கு அரிசியும், நீரும் வைக்கும் இடம் இந்த கோடைக்கு மிகவும் சூடாகி விடுகிறது. அதனால் கையோடு அதற்கும் சின்னதாய் ஒரு கட்டமைப்பு செய்து பந்தல் ஓன்று அமைத்து விட்டேன்……..Great 🙂

    Super Siva sir. I really appreciate you sir. Nowadays we are running behind “something” else but we don’t understand what the “something”.

    I am very much happy when I am reading your blog. I can understand your feelings.

    I wish you all the very best sir. I really eager to speak with you and visit your “DREAM GARDEN”. But I am in Chennai now and my hometown is Mayiladuthurai. I will definitely meet you one day Sir.

    All the very Best
    Thanks
    Ramesh S

    Like

  14. நன்றி ரமேஷ். குருவிக்கு உணவு வைப்பதெல்லாம் சிறிய விஷயம் தான். ஆனால் அதில் கிடைக்கும் திருப்தி நிறைய 🙂

    கோவை பக்கம் வந்தால் கூறுங்கள். ‘தோட்டம்’ உங்களை எப்போதும் வரவேற்க தயாராகவே இருக்கும் 😀

    Like

  15. உங்கள் தோட்டத்தில் வேலைக்கேனும் சேர்ந்து கொள்ள ஆசையாக உள்ளது…

    Like

Leave a comment