என் வீட்டுத் தோட்டத்தில் – திராட்சை

நான் சிறுவனாக இருந்த போதெல்லாம் பெரியவர்கள் ‘கேரட் சாப்பிடுல கண்ணுக்கு நல்லது’ ‘கொய்யாப்பழம் சாப்பிடுப்பு உடம்புக்கு நல்லது’ இப்படி தான் சொல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் ‘நவ்வாப்பழம் சாப்பிடுங்க சுகருக்கு நல்லது’ ‘கொய்யாப்பழம் சாப்பிடுங்க இரத்த கொதிப்புக்கு நல்லது’ என்று எல்லாவற்றையும் நோயை வைத்து தான் கூறுகிறார்கள். மக்கள் எல்லோரும் எந்த பழத்தை, காய்கறியை பார்த்தாலும் அது எந்த நோய்க்கு நல்லது என்று தான் பார்க்கிறார்கள். நமது வாழ்க்கைத்தரம் எப்படி உயர்ந்து கொண்டே போகிறது என்பதற்கு இதை விட நல்ல உதாரணம் இருக்கப்போவதில்லை. இப்படி நோயை தவிர்க்கிறேன் என்று தேடி தேடி பழத்தை சாப்பிட்டாலும் அது குளித்து வரும் இரசாயனத்தால் வரும் நோய்களை தவிர்க்க எதை தேடி போவதென்று தெரியவில்லை.

அப்படி பூச்சி மருந்துகளில் பூத்ததில் இருந்து பழம் பறிப்பது வரை மூழ்கி வரும் பழங்களில் குறிப்பாக திராட்சையை குறிப்பிடலாம். நம்மாழ்வார் ஐயா உயிரோடு இருந்த போது என் கோவை அலுவலகத்திற்கு ஒரு முறை வந்திருந்தார். அவர் திராட்சையை பற்றி கூறிய போது ‘திராட்சை கொடி மேல் விஷம் (பூச்சி மருந்து) தெளிக்கப்படுவதில்லை. ஒரு குவளையில் கிட்டத்தட்ட பத்துவிதமான இரசாயன கலவையை கலந்து ஒவ்வொரு திராட்சை கொடியை அந்த குவளையில் முக்கி முக்கி எடுப்பார்கள். திராட்சை பூத்து அறுவடைக்கு நூறு நாள். கிட்டத்த பதினாலு வாரம். வாரம் ஒருமுறை இப்படி முக்கி எடுப்பார்கள்’ என்றார். இப்படி வரும் திராட்சை எதற்கு நல்லது என்று தெரியவில்லை. அன்றில் இருந்து நாங்களும் சுத்தமாக திராட்சை வாங்குவதையே விட்டுவிட்டோம்.

அவர் பேசியதை ஒரு ரொம்ப சுமாரான மொபையில் நான் ரெக்கார்ட் செய்தது இங்கே. கேட்டுப் பாருங்கள்.

 

கடையில் வாங்க முடியாதென்றால் ஒரே வழி வீட்டில் விளைவிப்பது தான். பொதுவாகவே எங்கள் வீட்டில் பழங்கள் வெளியே வாங்குவதில்லை. மாதுளை, சீத்தா, சப்போட்டா, கொய்யா, மா எல்லாமே வீட்டுத் தேவைக்கு தோட்டத்தில் இருந்தே கிடைத்துவிடும். அதோடு திராட்சையையும் முயற்சித்தால் என்ன என்று தோன்றியது.

திராட்சை நாம் நினைப்பது போல அவ்வளவு கடினமான ஒரு தாவரம் கிடையாது. ஊரில் எல்லாம் சிலர் வீட்டில் திராட்சை கொடிகளை சாதரணமாக பந்தலில் விட்டு வளர்ப்பதை பார்த்திருக்கிறேன். அதனால் பெரிதாக திராட்சை விதை/நாற்றை தேடி எல்லாம் அலையவில்லை. ஊருக்கு (திசையன்விளை, திருநெல்வேலி மாவட்டம்) போன போது சந்தையில் இருக்கும் ஒரு நர்சரியில் போய் ஒரு திராட்சை நாற்று வாங்கி வந்தேன். நான் முன்பு கூறியது போல என் வீட்டில் இருக்கும் அத்தனை பழ மரங்களின் நாற்று இந்த சந்தையில் இருந்து வாங்கி வந்தது தான். திராட்சை நாற்று விலை ரூ.30 என்று நினைக்கிறேன். இது சாதாரண பன்னீர் திராட்சை கொடி தான் (விதை உள்ள அடர் ஊதா நிற திராட்சை). விதையில்லா திராட்சை எல்லாம் நமது சீதோஷ்ண நிலைக்கு வருமா என்று தெரியவில்லை.

12

 

 

திராட்சை நாற்று வாங்கும் போது சும்மா புடலை கொடி விடற மாதிரி ஒரு இடத்தை தயார் செய்து வளர்த்துக் கொள்ளலாம் என்று தான் நினைத்து இருந்தேன். அப்படி ஒரு திட்டத்தில் தான் வீட்டின் முன் ஒரு இடத்தில் வைத்து விட்டேன். அதுவும் மண் பிடித்து நன்றாக வந்து கொண்டிருந்தது. எப்படி கொடி அமைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது தான் மாடித்தோட்ட வேலைகளை ஆரம்பித்தேன். கார் விடும் இடத்தை வீணாக்காமல் மேலே ஒரு பந்தல் அமைத்ததை (12 அடி X 18 அடி) விவரமாய் முன்பே எழுதி இருந்தேன். அதை திராட்சைக்கே விட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன்.

ஒரு சிறிய பிரச்சனை, தரை தளத்தில் கொடியை வைத்து ஓரளவுக்கு வளர்ந்த பிறகு தான் முன்னால் உள்ள பாத்திகளை மேட்டு பாத்திகளாக மாற்றி சிமென்ட் சுவர் எழுப்பி உயர்த்தி கட்டினேன். அதில் மண் போட்டு உயர்த்தும் போது ஏற்கனவே வைத்திருந்த கொடியின் தண்டு பகுதி ஒன்றரை அடி அளவுக்கு மண் மூடி விட்டது. அதனால் தண்டு ஏதும் அழுகி கொடி பாதிக்குமோ என்று ஒரு சந்தேகம் இருந்தது. நல்லவேலையாக மண்ணில் மூழ்கிய தண்டிலும் வேர் வந்து செடி இன்னும் உறுதியாகி விட்டது.

பந்தல் அமைப்பை மூங்கில் கொண்டு அமைத்தது கொடி படர எதுவாக அமைத்தது. இரும்பு கம்பியோ, நைலான் கயிறோ வைத்து பந்தல் அமைத்ததால் வெயிலின் சூடு கொடியை பாதிக்கும். கொடி பந்தலை எட்டிப்பிடித்தவுடன் நாலா பக்கமும் அதுவாகவே படர ஆரம்பித்தது.

33a3b44a55a

 

திராட்சை இரண்டு விதமாக மொட்டு வைக்கிறது. ஒன்று, வழக்கம்போல மொட்டுக்கென்றே காம்பு வந்து அதில் கொத்தாய் மொட்டு வைக்கிறது. மற்றொன்று, பிடித்து ஏறும் கொடி சுருளில் மொட்டு வைத்து பூப்பது விசேஷமாய் இருக்கிறது.

67899a10

 

போன கோடையில் ஒரு ஐந்து பூங்கொத்து போல பூத்து, வெயிலில் எல்லாமே கருகி ஒன்றே ஓன்று மட்டும் காய்த்தது. இந்த சீசனில் முழுமையாக காய்க்க தொடங்கி இருக்கிறது. பந்தல் முழுவதையும் ஆக்கிரமித்து எங்கு பார்த்தாலும் பூக்கள் தான். திராட்சையை பொறுத்தவரை மொட்டுக்கள் பூப்பதிலோ, பூக்கள் பிஞ்சி பிடிப்பதிலோ எந்த பிரச்னையும் வருவதில்லை. வெயில் கொடுமைக்கு இல்லாமல் ஓரளவுக்கு மிதமாக இருந்தாலே நன்றாக காய்க்கிறது (சொல்லப்போனால் இந்த வருடம் கோவையில் இந்த மழை காலத்திலும் கொடுமைக்கு வெயில் அடிக்கிறது).

திராட்சை பூத்து பழம் பறிக்க கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகிவிடுகிறது. திராட்சை கொத்து பழுக்க ஆரம்பிக்கும் போது பறவைகள் கொத்தி தின்ன ஆரம்பித்து விடுகின்றன. அதை தடுக்க பழைய கொசுவலை ஒன்றை எடுத்து வெட்டி ஒவ்வொரு கொத்தாக சுற்றி கட்டிவிட்டேன். நன்கு பழுத்தது தெரிந்தவுடன் பறித்துக்கொள்ள வேண்டியதுதான்.

பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல் ஏதும் இல்லை. பெரிதாய் உர மேலாண்மை எல்லாம் செய்யவில்லை. மற்ற செடிகளுக்கு பஞ்சகாவ்யா கலந்து ஊற்றும் போது திராட்சைக்கும் ஊற்றி விடுவேன். பஞ்சகாவ்யா, வேப்பம்புண்ணாக்கு தெளிக்கும் போது திராட்சைக்கும் தெளித்து விடுவேன். அவ்வளவு தான்.

காய்கள் பழுத்துக் கொண்டிருக்கும் இதே வேளையில் சில புதிய கிளைகளில் பூக்களும் வந்து கொண்டிருக்கிறது. அதனால் இன்னும் நான்கு ஐந்து மாதங்களுக்கு தொடர்ந்து திராட்சை பறிக்கலாம்.

1111a11b121313a1414a1515a

 

சும்மா சொல்லவில்லை. பழத்தின் ருசி அருமை. பொதுவாய் பன்னீர் திராட்சையில் சில புளியங்காயை கடித்தது போல புளிக்கும். பழம் பறிக்கும் வரை ஒரு சஸ்பென்ஸ் இருந்தது. பறித்து ருசித்த பின் நம்ம வீட்டில் இன்னொரு சூப்பர் ஹிட் என்று உறுதி செய்து கொண்டோம். நாம் ஏதாவது புதிதாய் முயற்சி செய்து அது நாம் எதிர்பார்க்காத அளவுக்கு அருமையாக வந்தால் கிடைக்கும் சந்தோசத்திற்கு அளவே இல்லை. இவ்வளவுக்கும் திராட்சை வளர்க்கலாம் என்று முடிவு செய்த பிறகு நான் இணையத்திலோ, புத்தகங்களிலோ எந்த ஒரு விவரமும் சேகரிக்கவில்லை. நேரே எங்க ஊர் சந்தையில் போய் ஒரு நாற்று வாங்கி வந்து ஒரு குழி பறித்து நடவு செய்ததோடு சரி. இன்றைக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் பலன் கொடுத்து கொண்டிருக்கிறது.

தற்போது கிட்டத்தட்ட ஒரு 100 கொத்துகள் கொடியில் இருக்கும். சராசரியாக ஒவ்வொன்றும் 250 Grams எடை என்று வைத்தாலும் (சில கொத்துகள் கிட்டதட்ட முக்கால் கிலோ அளவுக்கு கூட வந்திருக்கிறது) 25 கிலோ திராட்சை கிடைக்கும்.

161717a17ab17c1818a19202122

 

 

நிறைய நண்பர்களிடம் இருந்து ஏதும் புதிய விளைச்சலை பார்த்தால் அடுக்கடுக்காய் கேள்விகள் வர ஆரம்பித்து விடுகிறது. என்ன மாதிரி நாற்று வாங்க வேண்டும், என்ன இடைவெளியில் என்ன என்ன உரம் வைக்க வேண்டும், வேறு என்னவெல்லாம் தெளிக்க வேண்டும், இப்படி நீண்ட பட்டியல். ஆனால் நிறைய நேரங்களில் நாம் விவரங்களை வைத்துக்கொண்டு தோட்டம் போடுவதை விட நிஜமான முயற்சியோடு எந்த செடியை வைத்தாலும் நன்றாக வரும். எனது அந்த நம்பிக்கையை இந்த திராட்சை கொடி இன்னும் உறுதி செய்தது.

பின் குறிப்பு : இந்த மாதத்தோடு இந்த தோட்டம் இணைய தளத்தில் இருந்து கொஞ்சம் விடுப்பு எடுக்கலாம் என்று இருக்கிறேன். கொஞ்ச காலம் வேறு சில வேலைகளில் கொஞ்சம் கவனம் செலுத்தலாம் என்று இருக்கிறேன். எனது ஞாயிறு அழைப்புகளையும் கொஞ்ச காலம் நிறுத்தி வைக்க இருக்கிறேன் (நவம்பரில் இருந்து). அதனால் தோட்டம் பற்றி எழுதுவதை அப்படியே விட்டுவிட போவதில்லை. எனது பழைய தோட்டம் ப்ளாக்கிலோ இல்லை புதிய ஒரு தளத்திலோ நேரம் கிடைக்கும் போது எழுதுவேன்.

Advertisements

9 thoughts on “என் வீட்டுத் தோட்டத்தில் – திராட்சை

 1. பின்குறிப்பை படித்தவுடன் எனது மனசு என்னவோ தெரியவில்லை ஒரு மாதிரி எதையோ இழுந்து விட்டது போல் ஆகி விட்டது.தயவு செய்து தொடரவும்.விட்டு ஒதிங்கி விடாதீர்கள்.

  Like

 2. கலக்கல் சிவா! விதையில்லா ரகமும் நன்கு வரலாம். கிரேக்கில் கடும் வெப்பத்தில் நன்கு வருகிறது , தொகாவில் பார்த்தேன்.

  Like

 3. சிவா அண்ணா உங்கள் வலைப்பதிவுகளை படித்து அதன் விளைவாக, எங்கள் வீட்டு மாடியில் முதல் கட்டமாக சிறியதாய் மாடித்தோட்டம் அமைக்க முயற்சி செய்துள்ளேன்.(உங்கள் செயல்முறைப்படி).

  Like

 4. hai,can you please tell me how to plant grapes form starting to end..which type of climate,manure,soil type etc.. to grow grapes

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s