என் வீட்டுத் தோட்டத்தில் – கொய்யா

என் வீட்டுத் தோட்டத்தில் – கொய்யா
ஊரில் வீட்டுக்கொரு கொய்யா மரம் எப்படியும் இருக்கும். பள்ளிக்கூடம் போகும் வயதில், அதில் ஏறி, பழமாக தேடி பறித்து சாப்பிடுவது ஒரு சந்தோசமான விஷயம். அதிலும் அணில் கடித்த பழம் என்றால் கூடுதல் ருசி என்று (அணிலுக்கு தான் தெரியுமாம் எந்த பழம் ருசியானது என்று) அதற்கு சண்டை போட்டுக் கொள்வோம். இப்படி மற்ற பழ மரங்கள் நிறைய இருந்தாலும் குட்டீஸ்களுக்கு ரொம்ப பிடித்தது கொய்யா தான். வெள்ளை பழம் என்றால் சீனி கொய்யா என்போம். சிவப்பு என்றால் கருப்பட்டி கொய்யா என்போம். இப்போதெல்லாம் சிவப்பு கொய்யா இங்கே அவ்வளவாக கிடைப்பது இல்லை. எல்லாம் ஹைப்ரிட் வகை வெள்ளை கொய்யா தான் பார்க்க முடிகிறது.
வீடு வாங்கிய பொழுது இந்த கொய்யா, ரொம்ப சின்ன செடியாக வேப்பமரம் பக்கத்தில் இருந்தது. தானாக முளைத்தது என்று நினைக்கிறேன். ஒரு சின்ன பாத்தி பிடித்து நீருற்ற, அதே இடத்திலேயே வளர்ந்து வந்தது. 
அது என்ன வெரைட்டி, காய்க்கும என்று எந்த ஐடியாவும் இல்லாததால் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. வேப்பமரம் நிழலில் நின்றதால் வெயிலுக்கு இடம் தேடி நின்று கொண்டிருந்தது. போர் போட வேப்பமரத்தின் ஒரு பெரிய கிளையை வெட்ட, கொய்யாவுக்கு வெயில் கிடைக்க வேகமாக வளர ஆரம்பித்தது. 
பிளான் பண்ணி வைக்காததால், கொஞ்சம் இடைஞ்சலான இடத்திலேயே இருந்தது. பேசாமல் மரத்தை எடுத்து விடலாம் என்று நினைத்த போது , போன வருடம் சாம்பிளுக்காக ஒரு 5 காய் காய்த்தது. பார்த்தால், சிவப்பு கொய்யா ,ரொம்ப சந்தோஷமாகி விட்டது. மரத்தை வெட்டும் ஐடியாவை விட்டு விட்டு, நன்றாக பாத்தி கட்டி, உரம் எல்லாம் போட்டு தனி கவனம் செலுத்த வைத்து விட்டது இந்த மரம்.
இந்த வருடம் சம்மரில் கொத்து கொத்தாக பூத்து காய்க்க ஆரம்பித்தது. ஜூலையில் பழுக்க ஆரம்பித்தது. எங்க வீட்டுக்கு வரும் குட்டீஸ் எல்லோருக்கும் தானாய் வளர்ந்த இந்த மரம் நான் முதல் பாராவில் எழுதிய அதே சந்தோசத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

13 thoughts on “என் வீட்டுத் தோட்டத்தில் – கொய்யா

  1. உங்களோட அத்தனை இடுகைகளையும் ஒண்ணு விடாமல் படிச்சுட்டு வரேன். எல்லோரும் வீட்ல தோட்டம் வைப்பாங்க. நீங்க தோட்டத்துல வீடு வெச்சிருக்கீங்க. ரொம்ப அழகாருக்கு. என்னதான் இருந்தாலும் நம்மூட்டுல விளைஞ்சதுன்னா அதுக்கு தனி ருசிதான்..

    Like

  2. ஹைய்யோ!!! பிங்க் கொய்யா!!!! எனக்கு ரொம்பப் பிடிக்குமே!!!உங்க வீட்டுக்குக் கட்டாயம் வரத்தான் வேனும் போல!!!!நியூஸியில் நம்ம வீட்டுக் கொய்யா இங்கே: http://thulasidhalam.blogspot.com/2012/05/blog-post_15.html

    Like

  3. டீச்சர், உங்க வீட்டு கொய்யா ரொம்ப வித்தியாசமா இருக்கு. கண்டிப்பா வீட்டுக்கு வாங்க, எப்போ வர்றீங்கன்னு சொல்லுங்க 🙂

    Like

  4. நன்றிங்க. நம்ம வீட்டுல பறித்து சமைத்தால் ஒரு சந்தோசம் தான் :-)//எல்லோரும் வீட்ல தோட்டம் வைப்பாங்க. நீங்க தோட்டத்துல வீடு வெச்சிருக்கீங்க// கரெக்ட் தான் 🙂

    Like

  5. உரம் என்று பார்த்தால் பொதுவாக சாணம் அல்லது மண் புழு உரம் போதுமானது. வருடம் இரண்டு முறை வைத்தால் போதும். ரசாயன உரம் ஏதும் வைக்க கூடாது (நிறைய காய்க்கும் என்றாலும்)

    Like

  6. அட கொய்யால..சூப்பரா இருக்கு அப்பு..எனக்கும் இந்த மாதிரி தோட்டம் வளர்க்க ஆசைதான்…நானும் ஒரு வீடு வாங்கும் போது நல்லா தோட்டம் வைக்கிறமாதிரி வாங்கி உங்களுக்கு போட்டியா போட்டோ போடப்போறேன்..

    Like

Leave a comment