தோட்ட உலா – செப்டம்பர் 2016

காராமணி / தட்டைகாய்

கொடியில் காய்ப்பதை எல்லாம் செடியில் காய்க்க வைக்கும் ஆராய்ச்சி பெரிய அளவில் போகிறது போல. செடியில் புடலையும், பாகலும் காய்த்தால் நன்றாக தான் இருக்கும். நாமும் வழக்கமாய் கொடியில் வாங்கும் ஆப்பை தவிர்க்கலாம். நம்முடைய இந்த ஆர்வத்தை புரிந்து கொண்டு தானோ என்னவோ கொடி அவரை விதையை எல்லாம் செடி அவரை என்று விற்கிறார்கள். நாமும் வாங்கி வந்து முளைக்கப் போட்டால், முளைத்து செடியின் கழுத்து நீண்டுக்கொண்டே போகும் போது தான் ‘ஏமாத்திட்டாங்க.. டோய்’ என்று உரைக்க ஆரம்பிக்கிறது.

இதே போல தான் ‘செடி காராமணி’ என்று பார்த்த போதும் ஆர்வத்தில் வாங்கி வந்து மாடியில் ஒரு ட்ரே முழுக்க பதினைந்து செடிகளை நட்டி விட்டேன். முளைத்து வந்ததுமே வழக்கம் போல ஏமாந்தது தெரிந்து போனது. எல்லாமே தலையை நீட்டிக்கொண்டு ‘எறுவதுக்கு குச்சிய எங்கேடா’ என்று கேட்டது. வெறும் பதினைத்து சதுர அடியில் பதினைந்து கொடி, வெளங்கிரும் என்று நினைத்து பிடுங்கி போட்டுவிடலாம் என்று நினைத்து கொண்டிருந்த வேளையில் தான், என் விவசாய நண்பர் சிவகுமார் வந்து ‘செடி காராமணி என்று உலகத்திலேயே கிடையாது. ஆனால் கொடியை ஒடித்து விட்டு விட்டால் போதும், பக்க கிளைகள் வந்து காய்க்க ஆரம்பித்து விடும்’ என்று ஒரு தகவலை கொடுத்து இந்த பதினைத்து செடிகளையும் காப்பாற்றினார்.

காராமணிக்கு தண்ணீர் குறைவாக விட்டால் நன்றாக பூக்கும் என்று கூடுதல் தகவலையும் கொடுத்தார்.

காராமணி வளர்ப்பதில் ஒரே பிரச்சினை அசுவனி பூச்சிகள். ‘விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி’ என்று ஒரு புத்தகத்தில் காராமணி செடி அசுவனி பூச்சிக்கு பிரியாணி போல என்று போட்டிருந்தது. வளர்த்த பிறகு தான் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரிந்தது. அசுவனி பூச்சிகள் வந்து கும்மி விட்டன. பூச்சிகள் வந்தவுடன் கூடவே கட்டெறும்பு கூட்டமும் சேர்ந்து அந்த ட்ரே முழுவதும் பூச்சி கூட்டம் நமக்கு முன்பே அறுவடை செய்து கொண்டிருந்தது. முடிந்த அளவுக்கு வேப்பம்புண்ணாக்கு கரைசல், சின்னதாய் ஒரு பிரஸ் அல்லது கை கொண்டு நீக்கி கட்டுப்படுத்தி விளைச்சல் எடுத்தாகி விட்டது. விளைச்சலில் குறைவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அவரை போன்ற செடிகள் வைக்கும் போது கொஞ்சம் தள்ளி ஐந்து காராமணி செடியையும் வைத்து விட்டால், அவரைக்கு வரும் அசுவனி பூச்சி எல்லாம் சந்தோசமாய் காராமணி செடிக்கு போய் விடும். அவரையில் தாக்குதல் குறைந்து விடும்.

 

a1a2a3a4a5a6

பாகல் கொடி

மாடித் தோட்டத்தில் கொடி வகையை பையில் வளர்ந்து கிடைத்த முதல் வெற்றி என்று கூறலாம். கொடி வகைகள் சொதப்புவதற்கு முக்கிய காரணமாய் தெரிவது சத்து குறைவு தான். கொடி வகைகள் எல்லாம் Heavy feeders,  அதாவது பெருந்தீனிகள் என்று கூறலாம். அதுவும் பையில் வளர்க்கும் போது இதை இன்னும் கவனமாகவே பார்க்க வேண்டிய இருக்கிறது. பையில் கொடியை வளர்க்கிறேன் என்று முன்பு நிறைய சொதப்பி இருந்ததால், இந்த முறை சில மாற்றங்கள் செய்தேன். வளர்ப்பு பையின் அளவை கொஞ்சம் உயரமாய் இருக்கும் படி 15 இன்ச் அகலம்,  18 இன்ச் உயரம் உள்ள பையில் ஒரே ஒரு பாகல் கொடி மட்டும் வைத்துக் கொண்டேன் (பல நேரங்களில் பேராசையில் கூட இரண்டு கொடியையும் ஒரே பையில் போட்டு மொத்தமாய் காலி செய்து விடுவது வழக்கமாய் நடக்கும்). வழக்கமான கலவை கூடவே காய்ந்த எருவும், இலை சருகும் சேர்த்துக் கொண்டேன். நீர் ஊற்றும் போது தவறாமல் வாரம் ஒரு முறை பஞ்சகாவ்யாவும் கலந்து ஊற்றினேன். தேவையான அளவுக்கு மண்புழு உரம் அவ்வப்போது கூடுதலாக போட்டு விட்டேன்.

தொடக்கத்தில் பாகல் செடியின் தண்டு பருத்து போக ஆரம்பித்தது. கொஞ்சம் சுண்ணாம்பு (பாதி ஸ்பூன்) எடுத்து ஒரு மக் நீரில் கலந்து வேரில் ஊற்றி விட்டேன். சரியாகி விட்டது (தண்டு பருத்து போவது கால்சியம் குறைபாடு என்று எங்கேயோ படித்திருக்கிறேன்).

கலக்கலாய் மாடித் தோட்டத்தில் இருந்து கொடியில் முதல் விளைச்சல் இதோ.

b1b2b3b4b5

 

சொதப்பும் மிளகாய்

மிளகாய் கடந்த ஆறு மாதமாய் வருவேனா என்று அடம்பிடிக்கிறது. விழுந்து விழுந்து கும்பிட்டாலும் இரண்டு இலை வந்ததும் சுருண்டு கொண்டு போய் விடுகிறது. குடை மிளகாயிலும் இதே பிரச்சனை. நண்பர் சிவகுமாரிடம் கேட்ட போது கோடை நோய் போல இருக்கலாம் என்றார். இந்த வருடம் மழை பொய்த்துக் கொண்டே போகிறது. கருமேகம் திரண்டு வந்தாலும் மழை கீழே விழுவேனா என்கிறது. அது தான் முக்கிய காரணமாய் தெரிகிறது. ஒரு மழை பெய்தால் தோட்டத்தில் முக்கால்வாசி நோய்கள் போய் செடிகள் அவ்வளவு செழிப்பாக மாறுவது நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன்.

மிளகாய்க்கு நிறைய வழிகளை முயற்சித்தும் ஒன்றுமே வேலைக்காகவில்லை. பஞ்சகாவ்யாவிலேயே குளிப்பாட்டியும் பயனில்லை.  ஆனாலும் வழக்கம் போல ட்ரே முழுக்க நாற்று எடுத்து நடுவது, எல்லாம் சுருண்டு போய் பிடுங்கி போடுவது என்று தான் கடந்த ஆறு மாதமாய் போகிறது. அக்டோபரிலாவது வருண பகவான் கண் திறந்தால் தான் இப்போதைக்கு ஒரு வழி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

c1c2c3

 

மாதுளை

நன்றாக காய்த்து கொண்டிருந்த மாதுளையில் கொஞ்சம் விளைச்சல் குறைய ஆரம்பித்தது. தொடக்கத்தில் White fly தாக்குதல் நிறைய இருந்து அதை சரி செய்ததையும் முன்பு ஒரு முறை எழுதி இருந்தேன். ஆனால் அதன் பிறகு பூ கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. மரமும் வைத்து ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது. சரி, ஒரு முறை கொஞ்சமாய் வெட்டி Pruning செய்தால் புதிதாய் கிளைகள் வரும், அப்போது நன்றாக பூக்கலாம் என்று நினைத்து வெட்ட ஆரம்பித்து கடைசில் கொடுமைக்கு மரமே மொட்டையாகி விட்டது. இப்படி ஒரு Pruning-ஐ பார்த்திருக்க மாட்டீர்கள். வீட்டில் பார்த்து விட்டு ‘ஐயய்யோ!!! அஞ்சு வருசமா நல்லா நின்ன மரத்தை இப்படி கொன்னுட்டீங்களே’ என்று அலறி விட்டார்கள். கொஞ்சம் ஓவரா தான் பண்ணிட்டோமோ என்று தோன்றினாலும், சரியாய் வரும் என்றே தோன்றியது.

கொஞ்ச நாளில் தளிர் விட்டு மரம் மறுபடி பழைய நிலைக்கு வந்து விட்டது. இந்த சீசனில் காய்த்து கொட்டி விட்டது. ஒரு இருபது கிலோ இதுவரை பறித்திருப்போம். இன்னும் ஒரு பத்து கிலோ போல காய் கிடக்கிறது.

Pruning செய்யும் போது அருவாளை கொண்டு கண்டபடி மரத்தை கொத்தி காயப்படுத்த கூடாது. அரம் கொண்டு கிளை சிதையாமல் வெட்டி விட வேண்டும்.

d1d2d3d4

 

பேபி கார்ன்

மாடியில் பேபி கார்ன் இப்போது ரெகுலராக போடுகிறேன். ஸ்வீட் கார்ன் சரியாக மாடியில் வருவதில்லை. விளைந்த பிறகு கதிரில் பாதி அளவுக்கு கூட முத்துகள் இருப்பதில்லை. வழக்கம் போல நிறைய சத்து தேவைப்படும் போல. ஆனால் பேபி கார்ன் அருமையாக வருகிறது.

மாடித் தோட்டத்தில் குடோன் அமைத்ததில் இருந்து அணில் கூட்டம் கிடைக்கும் அட்டை பெட்டிகளில் எல்லாம் ஒரு ஓட்டையை போட்டு குடியேறி விடுகிறது. அதோடு விடாமல் கீழே நான் தினமும் வைக்கும் சூரியகாந்தி விதையையும் சாப்பிட்டு விட்டு மாடியில் பேபி கார்ன் முளைக்க போட்டால் அதையும் கண்டுபிடித்து முளை விட்ட விதையை தோண்டி சாப்பிட்டுவிட்டு போய் விடுகிறது.  போன முறை ஒரு ட்ரேயில் பாதி செடி தான் தப்பித்தது.

இதை தடுக்க இப்போது முளைத்து கொஞ்சம் வரும் வரை அந்த ட்ரேக்கு மட்டும் நிழல் வலை கொண்டு சின்னதாய் ஒரு கூடாரம் போட்டு மறைத்து வைத்து வளர்க்கிறேன். வேறு வழி இல்லை. கொஞ்சம் வளர்ந்ததும் இந்த கூடாரத்தை எடுத்து விட வேண்டியது தான்.

தக்காளி பறித்து வைத்து கொஞ்சம் திரும்பினால் தூக்கிக் கொண்டு ஓடி விடும். தேடித் பார்த்தால் எங்காவது ஒரு அட்டை பெட்டிக்குள் இருக்கும். செம அட்டுழியம் செய்ய ஆரம்பித்து விட்டது. பிறகு அட்டை பெட்டியை எல்லாம் நீங்கிய பிறகு பெரிதாய் பிரச்சனை இல்லை.

e1e2e3e4

 

ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்

மாடித் தோட்டத்தில் வெண்டையில் ஒரே பூவில் இருந்து இந்த இரட்டையர்கள் காய்த்திருந்தார்கள். எல்லாமே இப்படி காயத்தால் விளைச்சலை இரு மடங்காக்கி விடலாம் 🙂

 

f1

 

27 thoughts on “தோட்ட உலா – செப்டம்பர் 2016

    • நன்றி தங்கவேல். கலக்கவும் செய்வோம். சில நேரம் கலங்கியும் போவோம் 🙂

      Like

  1. தோட்ட உலா அருமை. நான் தோட்டத்தை நேரில் வந்து பார்த்தது போல் இருந்தது.மகிழ்ச்சி.

    Like

  2. பயனுள்ள பதிவு அண்ணா,செடியில் வரும் பிரச்சனைகளை தீர்க்க துணிச்சலான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறுகிறீர்கள் வாழ்த்துகள் அண்ணா.
    திருப்பூர் சரவணக்குமார்

    Like

    • நன்றி சரவணக்குமார். முயற்சிகளை நாம் செய்து கொண்டே இருக்க வேண்டியது தோட்டத்தை பொறுத்தவரை மிக அவசியம். தோல்வி என்றால் அடுத்த முறை சரி செய்து கொள்ள வேண்டியதுதான்.

      Like

  3. hi friend,
    உங்க இந்த பதிவும் உதவியாக இருகிறது காரணம் தெரியாமல் குழம்பி கொண்டு இருககும் போது உங்கள் பதிவுகள் ஆறுதலா இருகிறது தோடட எஸ்பிர்ட் உங்களுக்கே பிரச்சனை வரும் போது நாங்களும் என்ன சொல்வது நீங்கள் பகிரும் எல்லா விஷயங்களும் சோர்ந்து போகாமல் இருக்க உதவுகிறது அணிலார் கூடவும் மல்லுக்கட்டி பொழுது போகிறது போல………. காயகாமல் இருககும் கொடிகளுககு என்ன செய்வது திவ்யமாய் பூக்குது

    Like

    • இயற்கையாய் தோட்டம் அமைக்கும் போது எல்லாமே அமைந்து வரும் வரை இது போல பிரச்னை வர தான் செய்யும். இதே ரசாயன முறை என்றால் ஒரு விசத்தை எடுத்து தெளித்துவிட்டால் பிரச்னை முடிந்தது. இயற்கை முறையில் நாம் செய்யும் விசயங்களில் என்பது சதவீதம் நன்றாகவே வரும். ஒருசில நேரம் இது போல பிரச்சனைகள் வரும். நாம் செய்வதை செய்து கொண்டிருக்க வேண்டியது தான்.

      அணிலார் கொஞ்சம் பிரச்னை செய்யத்தான் செய்கிறார். வளர்ந்த கார்ன் செடியையே பிய்த்து போட்டு விடுகிறார். கொஞ்சம் பார்த்து தான் காப்பாற்றி கொண்டு வர வேண்டிய இருக்கிறது.

      கொடியில் பிஞ்சி வைத்து மலர்கள் வருகிறதா? இல்லை ஆண் மலர்கள் மட்டும் தான் வருகிறதா? பஞ்சகாவ்யா தொடர்ந்து தெளித்து பாருங்கள்.

      Like

      • hi friend,
        நன்றி 1.2, பிஞ்சொடு மலர் அவையும் பிஞ்சுலேயே காய்ந்து விடுகிறது மற்ற படி அதிகம் ஆண்மலர்களே நீங்கள் சொன்னதை முயற்சிகிறேன்……. எப்பொழுதும் 15 நாடகளுககு ஒரு முறை பஞ்சகாவியா மீன் அமிலம் கூட ஊற்றி வந்துவிடடேன் மீன் அமிலத்தால் அதிகம் பூச்சிகள் வர வாய்ப்பு இருகிறதா ?

        Like

  4. எப்போதும் போல மிகவும் அருமையான பதிவு சிவா!
    செடி அவரை என்று புதிதாக தெரிந்துகொள்வதற்கு மிகவும் உதவியாக இருந்தது!
    நான் வைத்த தக்காளி செடி பூ பூக்கிறவரை நன்றாக வந்து இருக்கிறது ஆனால் அதற்கு மேல் காய் பிடிப்பதற்கு தயங்குகிறது. பூ பூப்பதோடு சேரி காய்ந்து விழுந்து விடுகிறது. நான் வாரம் ஒரு முறை பஞ்சகவ்யம் மற்றும் மண்புழுவுரம் இடுகிறேன் ஆனாலும் பலன் இல்லை. ஏதாவது ஆலோசனை இருந்தால் கூறுங்கள் சிவா! வேண்டுமென்றால் புகைப்படம் தங்களுக்கு மடல் மூலம் அனுப்புகிறேன்.

    Like

    • நன்றி மதன்.

      புகைப்படம் இருந்தால் தனி மடலில் அனுப்புங்களேன். பார்க்கிறேன்.

      Like

  5. சிவா அண்ணா தோட்டத்தில் எலி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் அண்ணா ?

    விதை நாற்று , சிறு செடிகளையும் வீணடிக்கிறது.

    Like

  6. Dear Mr Siva,pl accept my congratulations and bestwishes for ur excellent work which gives lot of motivation for the people who are trying to form Terrace garden in their houses.let ur efforts be continued . With Blessings.

    Like

  7. சில நேரங்களில் சிறிய வகை சிலந்தி பூச்சி வந்தாலும், அல்லது இலையின் பின்புறம் எதாவது சாறு உறிஞ்சும் பூச்சி முட்டையிட்டு இருந்தாலும் கூட மிளகாய் செடி இப்படி ஆகி விடுகிறது.

    Like

Leave a comment