என் வீட்டுத் தோட்டத்தில் – நூல்கோல் (Knol Khol)

கொஞ்சம் இடைவெளிக்கு பிறகு என் வீட்டுத் தோட்டத்தில் இருந்து ஒரு புதிய காய்கறி. ஒரு வித்தியாசமான காய்கறி. பூ பூத்து காய்க்கும் பொதுவான காய்கறிகளுக்கு இடையே காலி ஃப்ளவர் மாதிரி வெறும் பூவே உணவாய், முட்டை கோஸ் மாதிரி வெறும் இலையே பந்து போல ஒரு காய்கறியாய், சில வித்தியாசமான காய்கறிகள் சில உண்டு. அந்த வகையில் இந்த நூல்கோலும் உண்டு.

கடையில் இந்த காயை பார்க்கும் போதெல்லாம் இது எப்படி காய்க்கும், பூத்து காய்க்குமா இல்லை கோஸ் மாதிரி இலை சுற்றபட்டு நடுவில் இருக்குமா, இப்படி சில கேள்விகள் எழும். அதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், ரொம்ப சிம்பிள், தோட்டத்தில் வளர்த்து பார்த்தால் வேலை முடிந்தது. இப்படி சில செடிகள் வளர்க்கும் போது அதில் அறுவடை எடுக்கும் வரை எப்படி வருகிறதென்று பார்க்க ஒரு த்ரில்லிங் இருக்கும்.

விதை ஹைப்ரிட் தான் (இதற்கெல்லாம் நாட்டு விதை கிடைக்குமா என்று தெரியவில்லை). Omaxe இணையத்தில் வாங்கியது. நான் எந்த செடிக்கும் தனி திட்டமோ, கூடுதல் உரம், தனி ஊடகம் என்று யோசிப்பதில்லை. எல்லா செடிகளுக்கும் ஒரே முறை தான். விதையை எடுத்தோமா, நர்சரி ட்ரேயில் போட்டோமா, எடுத்து நடும் அளவுக்கு வந்தவுடன் ஒரு அடி இடைவெளில் எடுத்து நட்டோமா. அவ்ளோ தான். காய் அறுவடை அளவுக்கு தெரிந்தவுடன் பறித்துவிட வேண்டியது தான்.

முட்டை கோஸ், காலி ஃப்ளவர் எல்லாம் ஜூலையில் நட்டு நவம்பர்-டிசம்பர் குளிர்காலத்தில் அறுவடை செய்ய சிறந்தது. இந்த கோடை அக்னி நட்சத்திரத்தில் எல்லாம் காலி ஃப்ளவர் விளையும் என்று எதிர்பார்க்க முடியாது. நூல்கோலும் அப்படி ஒரு வகையாக தான் இருக்குமென்று நினைத்தாலும், அவ்வளவு நாள் காத்திருக்க முடியாதென்று ஜனவரியில் நர்சரி ட்ரேயில் போட்டு விட்டேன். சரியாக கோடை வெயிலில் மாட்டும் என்று தெரியும். சரியா வராட்டா, இருக்கவே இருக்குது அடுத்த சீசன்  என்று ஒரு நினைப்பு தான்.

மாடித்தோட்டம் வேலை வேறு போய்க் கொண்டிருந்ததால் பெரிதாய் இந்த செடியில் கவனம் செலுத்த முடியவில்லை. மாடியில் பெரிய ட்ரே தயாரானதும் எடுத்து ஒரு அடி இடைவெளியில் வைத்து விட்டேன். செடி முட்டை கோஸ் மாதிரி தான் தெரிந்தது. வழக்கமான வளர்ப்பு ஊடகத்தில் இந்த கோடையிலும் செடி செழிப்பாகவே வந்தது.

அடுத்த முக்கியமான கட்டம். காய் எப்படி வருகின்றதென்று பார்க்க வீட்டில் எல்லோருக்குமே ஆவல். பூக்குமா, தனி கிளை ஓன்று வந்து அதில் நூல்கோல் வருமா என்று ஒரு ஆர்வம் தான். ஓரளவுக்கு செடி வளர்ந்ததும் மையத்தண்டு கொஞ்சமாய் பருக்க ஆரம்பித்தது. அதுவே மெதுவாக நூல்கோலாக மாறி விட்டது. ஓரளவுக்கு வளர்ச்சி வந்ததும் அறுவடை செய்தோம்.

இந்த கோடை வெயிலுக்கும் நன்றாகவே செடி வந்தது (நிழல்வலையும் ஒரு காரணமாய் இருக்கலாம்). எந்த நோய் தாக்குதலும் இல்லை. ஜனவரி நடுவில் விதைத்தது ஏப்ரல் கடைசியில் அறுவடைக்கு வந்து விட்டது (கிட்டதட்ட 3 ½  மாதங்கள்). இந்த வாரம் எங்கள் வீட்டில் நூல்கோல் சாம்பார் தான் 🙂

1234567891011

 

29 thoughts on “என் வீட்டுத் தோட்டத்தில் – நூல்கோல் (Knol Khol)

  1. மிகவும் அருமை அண்ணா…பார்க்கவே மிகவும் அழகாக உள்ளது…நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்

    Like

    • நன்றி ஷர்மிளா.

      நான் கூறியபடி இது எல்லா சீசனுக்குமே நன்றாக வரும் போல் தெரிகிறது. முயற்சியுங்கள்.

      Like

  2. சூப்பா் சிவா….

    வளா்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் படம் பிடித்திருப்பது அருமை நண்பரே..எனக்கு ரொம்ப பிடித்த காய் இது.

    நான் முட்டைகோஸ் போட்டிருக்கிறேன் செடியின் அளவு கொஞ்சம் சின்னதாய் இருக்கிறது (வெய்யில்

    காரணமாக இருக்கலாம் இங்கு கொஞ்சம் அதிக வெயில்தான்) ஆனால் இப்படி அதன் வளா்ச்சியை தொடராக

    புகைப்படம் எடுக்கவில்லை. இனிமேல் எந்த ஒரு புது முயற்சியையும் வாிசையாக புகைப்படம் எடுக்க

    வேண்டும் .அப்போதுதானே அடுத்தவா்களின் சந்தேகங்களுக்கு(நமக்கும்தான்) அது விளக்கமாக அமையும்,

    அதுதானே நம் நோக்கமும்… நன்றி.

    Like

    • நன்றி அண்ணா.

      கோடையில் முட்டை கோஸ் கொஞ்சம் கடினமாச்சே. எப்படி வருகிறதென்று கூறுங்கள்.

      தோட்டத்தோடு புகைப்படம் எடுப்பதையும் சேர்த்துக்கொண்டால் இன்னும் சுவாரசியம் தான். ஆரம்பியுங்கள்

      Like

      • super anna. நல்லா fresh’a இருக்கு. உங்க pictures பார்த்தா செடிலாம் நல்லா வளா்க்கலாம்னு நம்பிக்கை

        வருது.

        Like

        • நன்றி கவி. ஆமாம். செடிகள் நல்ல செழிப்பாய் தெரியும். அதுவும் இந்த கோடை வெயிலுக்கே. நீங்களும் முயற்சி செய்யலாம்.

          Like

  3. Super anna

    Naan idhu naalvarai nool khol oru tuber endru dhan ninathu irundhaen. En ninaippu poyyagi vittadhu.

    En veetu thoddam vidhaippukku thayaaraagi kondu irukkindradhu.

    omaxe inayam endru sonneeragale. inaya mugavari konjam anuppungal anna please.

    Regards

    Kavitha

    Like

    • நன்றி கவிதா. மழை காலம் போல இருப்பதால் இப்போதே ஆரம்பிக்கலாம்.

      http://omaxehybridseeds.com/ – இது தான் முகவரி. முன்பு விதை எல்லாம் ரூ.40 தான். இப்போது விலையை ரூ. 55 ஆக்கிவிட்டார்கள். http://www.biocarve.com/ ல் விலை ரூ. 30 தான். அங்கேயும் வாங்கலாம்.

      Like

    • 1 X 1 அல்லது 1 1/4 X 1 (அகலம் X உயரம்) உள்ள பைகள் எல்லா செடிகளுக்கும் ஏற்றது. சிறியதில் ஒரு செடி வைக்கலாம். கொஞ்சம் பெரியதில் இரண்டு செடிகள் வைக்கலாம்.

      Like

  4. சூப்பர் அண்ணா பார்க்க ரொம்ப அழகா இருக்கு.

    என்னோட வீட்டில் இருக்கற

    செடிங்க எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கு.மாவு பூச்சியால

    என்ன செஞ்சும் போகல. பார்க்கவே கஷ்டமா இருக்கு என்ன

    பண்ணலாம்.கொஞ்சம் சொல்லுங்க அண்ணா.

    Like

    • நன்றி.

      மாவுப் பூச்சிக்கு முதலில் செடியில் இருந்து எல்லாவற்றையும் நீக்கவும். மொத்தமாக நீக்கி விடவும். அதன் பிறகு ஒரு லிட்டர் நீரில் 100 அளவில் வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று நாட்கள் தெளித்து வாருங்கள்.

      Like

  5. அருமை சிவா அண்ணா..

    இந்த மாதிரி காய்கறியெல்லாம் கடையில பாக்குறதோட சரி.. எப்படி வளரும் என்பெதெல்லாம் தெரியாது.. வளர்த்துப்பார்க்கனும் என்கிற ஆசையெல்லாம் கிடையாது.. ( கத்தரி, தக்காளிக்கே நாக்கு தள்ளுது) நல்ல முயற்சி, படங்கள் மிக அருமை…
    வாழ்த்துகள்ணா…

    Like

    • நன்றி தம்பி.

      நீயே இப்படி சொன்ன எப்படி.. அதுவும் இங்கே கோவையில் இருந்து கொண்டே 🙂 . உன்னுடைய அறிவுரைப்படி வீட்டு முன் செய்த இருமடிப் பாத்தியில் விளைச்சல் கலக்கி விட்டது. விவரமாக் பிறகு பகிர்ந்து கொள்கிறேன்.

      Like

  6. ஹாய் சிவா! நலம் தானே. இது எங்க ஊரில்(இங்கு) கோல்ராபி (kohlrabi) ந்னு சொல்வாங்க. நாங்களும் சாம்பார் வைப்போம். பருப்போடு சேர்த்து கூட்டு மாதிரி வைக்கலாம். இலையும் நல்ல சத்து. அதையும் முட்டைகோஸ் மாதிரிபொரியல் செய்யலாம். மெல்லிதா நறுக்கி காயிலும் கொஞ்சம் ஸ்க்ரப் செய்து இரண்டையும் சேர்த்து வதக்கி பொரியல் செய்யலாம். காயை இலையுடன் சேர்க்கும்போது கொஞ்சம் பிழிந்து தண்ணீரை எடுத்திடனும். இல்லைன்னா குழைந்திடும். சேர்க்காமலும் செய்யலாம். வீட்டுல சொல்லுங்க செய்துதருவாங்க. 🙂
    நூல்கோல் நன்றாக வந்திருக்கு. நான் இம்முறை ஆஸ் யூஸ்வல் தக்காளி,மிளகாய் ஒன்லி. காலநிலை கைகொடுக்காது இங்கு.

    Like

    • நன்றி ப்ரியா.

      நல்ல ரெசிபியா இருக்குதே ப்ரியா. வீட்டில் சொல்லி பார்க்கிறேன். இன்னும் பாதி நூல்கோல் பறிக்காமல் இருக்கிறது. அடுத்த வாரம் பறிக்கலாம்.

      உங்கள் தோட்டம் பற்றி உங்கள் ப்ளாக்-ல் ஏதும் பகிர்ந்து கொண்டீர்களா ?

      Like

  7. வணக்கம் சிவா அண்ணா,
    புதிய தளம் அமைத்த பிறகு ஒரு முறை தளத்தை பார்த்தேன். அதன் பிறகு இப்போதுதான் பார்க்க நேரம் கிடைத்தது . இவ்ளோ காசு செலவு பண்ணியும் இவ்ளோ மெனக்கெட்டும் யாராவது தோட்டம் போடு வாங்கலன்னு என்னக்கு தெரியல.. ரொம்ப ஆத்மா திருப்தியோட செஞ்சுட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள்.. உங்க மேல இருக்க மரியாதையை கூடிகிட்டே போகுது. திராட்சை நல்லா வருதுங்கலா.. என்னக்கும் ஆசை தான்.. எப்போது வைத்தால் வரும்.. விதை குச்சி ஏங்கே கிடைக்கும். அதை பற்றிய தகவல் இருந்தால் அனுப்பவும்.. தக்காளி, மிளகாய் அறுவடை முடித்து அடுத்த நடவுக்கு தயாராக இருக்கிறது. இப்போதைக்கு கொத்தமல்லி ,சிறுகீரை மட்டும் இருக்கிறது.. வெயில் ரொம்ப அதிகம், கடுமையான நீர் பற்றாக்குறை அண்ணா. பாசிபயறு ஒரு ஏக்கர் அளவு கருகி போனது. புதிய முயற்சியாக பெர்ம்மாகல்ச்சர் முறையில் ஒரு சிறிய தோட்டம் அமைக்கலாம் என்று யோசனை. தங்களுக்கு தெரிந்த தகவல்களை சொல்லுங்க. தங்களுடைய புதிய முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் அண்ணா.

    Like

    • நன்றி மனோஜ்.

      திராட்சை நன்றாக வந்து கொண்டிருக்கிறது. பூக்கள் எல்லாம் பிஞ்சுகளாக மாறி விட்டன. எப்படி பிடித்து வருகின்றன என்று பாப்போம்.

      திராட்சை செடிக்கு பக்கத்தில் நர்சரியில் கேட்டு பாருங்கள். நான் வைத்திருக்கும் செடி எங்கள் ஊரில் சந்தைக்குள் இருக்கும் ஒரு சின்ன நர்சரியில் இருந்து வாங்கியது தான். விசாரித்து பார்த்து சொல்லுங்கள்.

      /பாசிபயறு ஒரு ஏக்கர் அளவு கருகி போனது./ இந்த முறை வெயிலுக்கு எல்லாமே கருகி தான் போனது. ஒரு விவசாயியாய் ஒவ்வருவருடைய கஷ்டமும் சொல்ல முடியாதது.

      பெர்ம்மாகல்ச்சர் முறையா நான் ஏதும் அந்த பக்கம் போகவில்லையே. விவரமாக சொல்லுங்கள் மனோஜ்.

      Like

  8. முதல் முறையா நூல்கோல் வளர்வதை பார்த்தாச்சு! 🙂 பகிர்வுக்கு நன்றிங்க!! பார்க்கவே ஆசையா இருக்கு..நானும் விதை கிடைக்குதானு பார்க்கிறேன். இந்த காயில் குருமா செய்வோம் எங்க வீட்டில..நல்லா இருக்கும்..சாம்பார்ல நான் யூஸ் பண்ணியதில்லை..!

    Like

    • நன்றி மகி. விதை இணையத்தில் தான் கிடைக்கும். பாருங்கள்.

      Like

  9. அருமை சிவா சார்….அருமையான புகை படங்கள். நூற்கோல் கோடி போன்று தரையில் படரும் என்று நன் நினைத்து இருந்தேன். ஒரு பசுமை விகடன் புத்தகத்தில் தறியில் படரும் கொடி யாக பார்த்தது போல் இருக்கிறது.

    ஊரில் தரையில் தக்காளி செடி வைத்ததில் பத்துக்கு மூன்று செடி மட்டுமே காய்க்க தொடங்கியிருக்கிறது. செடிகள் ஒவ்வொன்றும் ஆறு அடிக்கு மேல் வளர்ந்து பூக்கள் நெறைய வைத்து இருக்கிறது. ஆனால் பிஞ்சு வைக்கவில்லை. ஏதேனும் குறிப்பிட்ட காரணம் இருக்கலாமா?

    நன்றி
    ரமேஷ்

    Like

    • நன்றி ரமேஷ். கொடி போல படரும் வகை ஏதும் இருப்பதாக தெரியவில்லை. எல்லாமே கோஸ் மாதிரி வரும் செடி தான்.

      தக்காளி செடி பற்றி, புதிதாய் கேள்வி-பதில் பகுதியில் சில விவரங்கள் கொடுத்திருக்கிறேன். பாருங்கள்.

      Like

Leave a comment