தோட்டம் 2.0 (பகுதி-3)

மாடித் தோட்டத்தை மாற்றிய கையோடு கீழே தரை தளத்தில் உள்ள பாத்திகளிலும் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்தேன். போன சீசனில் தரையில் உள்ள செடிகள் அவ்வளவு செழிப்பாய் வரவில்லை. தோட்டம் பார்க்க வந்த இசக்கிமுத்து தம்பி கூட தரை ரொம்ப இறுகி போய் இருக்கிறது அண்ணா, சரி செய்யலாமே என்று கேட்டான். இருமடிப் பாத்தி பற்றி நம்மாழ்வார் புத்தகத்தில் படித்திருக்கிறேன். மேல் மண் ஒரு அடி ஆழத்திற்கு தனியாக எடுத்து வைத்து, கீழ் மண்ணை கடப்பாரை கொண்டு நன்கு கிளறி விட்டு, அதன் மேல் எரு, இலை சருகுகள் போட்டு, அதன் மேல் மண்ணை மூடி விட்டால் இருமடிப் பாத்தி தயார். இதை கொஞ்சம் மேடாக அமைக்க சொல்கிறார்கள்.

எனது நிலத்தில் தொடக்கத்தில் கரிசல் மண் தான் இருந்தது. நான் ஒரு அடி மண்ணை நீக்கி விட்டு செம்மண் போட்டு தான் வீட்டை சுற்றி அத்தனை பாத்தியையும் (மரங்களுக்கும் சேர்த்து) அமைத்திருந்தேன். அதில் இன்னும் எவ்வளவு தோண்டி இருமடிப் பாத்தி அமைக்க முடியும் என்று யோசனையாக இருந்தது.

Raised Bed Gardening பற்றி சில இணைய தளங்களில் படித்திருக்கிறேன். அதை பொதுவாக வெளிநாடுகளில் மரப்பலகைகள் கொண்டு அமைக்கிறார்கள். அது நம்ம ஊர் தட்ப வெப்பநிலைக்கு எல்லாம் சரி படாது. கடைசியில் கரையான்களுக்கு தீனி போட்டது மாதிரி ஆகிவிடும். சிறிய திட்டமிடலுக்கு பிறகு, பாத்திகளை ஒரு அடுக்கு செங்கல் வைத்து சுற்றுசுவர் எழுப்பி Raised Bed அமைத்து பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். எழுப்புறது தான் எழுப்பறோம் கூட ஒரு அடி சேர்த்தே எழுப்பிடலாம் என்று மொத்தம் 1 ¾ அடி சுவர் அமைத்து விட்டேன் (கொத்தனார் வைத்து தான்). கடைசியில் வெறும் சுற்று சுவர் மட்டும் தான். கீழ் பகுதி அப்படியே பழைய தரைதளம் தான்.

இந்த அமைப்பு தயாரானதும் உள்ள முடிந்த அளவுக்கு கடப்பாரை கொண்டு கிளறி விட்டேன். அதன் மேல் ஒரு அடுக்கு வேப்பிலை பறித்து போட்டேன். இவ்வளவுக்கும் காய்ந்த சருகு தயார் செய்ய முடியாது. எனவே பச்சை இலையையே பறித்து போட்டுவிட்டேன். (கோவையில் வேப்ப மரத்திற்கு பஞ்சமே கிடையாது. எந்த காலி இடம் இருந்தாலும் சின்னதாய் நான்கு வேப்பமரம் நிற்கும்).

ஒரு யூனிட் செம்மண் (Rs. 2300), அரை யூனிட் மணல் (Rs.2200), ஒரு டிராக்டர் அளவுக்கு மாட்டு எரு (Rs.2000 + Rs.700 handling charges 🙂 ). இவற்றை வாங்கிக் கொண்டேன் (கொஞ்சம் செலவு அதிகம் தான்.. இறங்கி தான் பார்ப்போமே.. விளைச்சலை தான் எப்படி வருகிறது என்று பார்ப்போம் என்று ஒரு ஆவல் தான்). வேப்பிலை போட்டு அதன் மேல் ஒரு அடுக்குக்கு வெறும் எரு மட்டும் போட்டு, வேப்பிலையும் சாணமும் நன்றாக கலக்க நன்றாக தண்ணீரை அடித்து விட்டேன். இந்த அடுக்குக்கு மேல் செம்மண்ணும், மணலும் 2:1 என்ற விகிதத்தில் நன்றாக கலந்து ஒரு அடுக்கு. ஒரு கட்டத்தில் மண் உயரமாய் இருப்பதால் இறுகி விடக் கூடாது என்று, முடிந்த அளவுக்கு நிறைய மணல் கலந்தேன்.

இந்த அடுக்கிற்கு மேல் தான் முக்கால் அடிக்கு நமது மெயின் கலவை (முக்கிய வளர்ப்பு ஊடகம்). செம்மண், மணல், எரு (கிட்டத்தட்ட 2:1:2 என்ற விகிதத்தில்), அதன் கூட ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த காய்ந்த வேப்ப இலை சருகு, கொஞ்சமாய் வேப்பம் புண்ணாக்கு, கொஞ்சமாய் மண்புழு உரம். இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா என்கிற அளவில் ஒரு கலவை. கிட்டத்தட்ட மொத்தம் இரண்டு யூனிட் கலவையை கலந்து போடுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. சுற்று சுவர் கட்டிய செலவு, இந்த கலவைக்கு ஆனா செலவு என்று பார்த்ததில் ‘மவனே, விளைச்சல் மட்டும் பல்ல காட்டிக்கிட்டு போச்சின்னா ஊரே சிரிக்கும்’ என்று மனதில் ஒரு யோசனையும் ஓடிக் கொண்டிருந்தது.

மொத்தம் ஆறு பாத்திகள். முதல் பாத்தியில் பந்தல் அமைத்து புடலை, மற்றவற்றில்  தக்காளி, வெண்டை, கத்தரி, கருணை கிழங்கு, சிறு கிழங்கு என்று வைத்து விட்டேன். ஒரே வார்த்தையில் விளைச்சலை சொல்ல வேண்டுமென்றால் ‘மிரட்டல்’. வெண்டை செடியையும், கத்தரி செடியையும் இவ்வளவு செழிப்பாக பார்த்து சில வருடங்கள் ஆகிவிட்டது. ஒவ்வொரு இலையும் இரண்டு கை அளவுக்கு பெரிதாய், பார்க்கவே ரொம்ப சந்தோசமாய் இருக்கிறது. உலக அதிசயமாய் புடலை கொடி அருமையாய் வந்திருக்கிறது. அடிச்சா மொட்ட வச்சா குடுமி என்பது மாதிரி இந்த முறை வைக்கிறதெல்லாம் பிஞ்சி மொட்டு. முதலில் கொடி தான் சரியாக வராதே என்று மூன்று கொடிகள் வைத்து விட, பிறகு அதை இரண்டு கொடிகள் ஆக்கிவிட்டேன். இருந்தாலும் இடம் போதவில்லை. அதனாலேயே செடி கொஞ்சம் திணறுகிறது. ஒரு கொடியோடு விட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.  இதை வைத்து ஒரு வீடியோவும் செய்திருக்கிறேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள்

 

இந்த Raised Bed அமைப்பில் நான் எதிர் பார்க்கும் சில நன்மைகள்,

  • வளர்ப்பு ஊடகத்தை ஒரு அடி அளவுக்கு எளிதாக கிளறி, நினைத்த மாதிரி அமைக்க முடியும்.
  • ஊடகம் தளர்வாய் இருப்பதால் செடியின் வேர்கள் எளிதாக ஆழமாய் செல்லும். வளர்ச்சியும் விளைச்சலும் நன்றாக இருக்கும்.
  • களைகளை எளிதாக கட்டுப்படுத்த முடியும் (உயரமான படுக்கை இருப்பதால் தரை தளத்தில் இருந்து களைகள் மேலே வராது. மேலே வளரும் களைகளை ஊடகம் தளர்வாய் இருப்பதால் எளிதாக நீக்கி விடலாம்)
  • மேல் பகுதியில் சுற்று சுவர் உயரத்தில் ஒரு வேலி மாதிரி இருப்பதால் தக்காளி மாதிரி செடிகள் மழையில் சரிந்தாலும் மண்ணில் படாமல் சாய்ந்து கொள்ளும்.
  • சுற்று சுவர் இருப்பதால் மூடாக்கு (Mulching) போடுவது எளிது. காய்ந்த இலை சருகுகள் கிடைத்தால் அள்ளி போட்டுக் கொண்டே வரலாம். மக்கி உரமும் ஆகி கொள்ளும். நல்ல போர்வை போலவும் நிலத்தை போர்த்திக் கொள்ளும்.

1a1b2345678

 

(தொடரும்)

39 thoughts on “தோட்டம் 2.0 (பகுதி-3)

  1. அருமை. உங்கள் ஊர் தட்பவெப்பத்திற்கு எல்லா செடி கொடிகளும் நல்ல பலன் தரும் என நினைக்கிறேன் வாழ்த்துக்கள்

    Like

    • ஆமாம் அண்ணா. கோவை தட்பவெப்ப நிலை மற்ற ஊர்களை விட கொஞ்சம் சாதகமாகவே இருக்கிறது. (வெயில் அதிகம் இருந்தாலும்)

      Like

  2. Siva, wow Excellent. Plants are very healthy and looks great & awesome, I really appreciate your effort and the way your presentation is too good. Very very helpful for us, clean & neat instruction step by step procedure.

    Colour your cement raised bed with your favorite Greenish ,will be good and looks great.

    Please update your new Terrace shade net video (latest), waiting to see that in Video,photos already enjoyed want to see the video.

    Great Job,all the best wishes for your upcoming Garden.

    Like

    • Thanks Rajesh. I didn’t think about painting the raised bed. Let me see if I can do it 🙂

      Sure. Will work on making a video of my terrace garden and post it soon.

      Like

  3. well done Siva. plants looks very healthy. If you used any pesticides share it please. video & pictures are excellent.

    நம்மாழ்வாரின் மற்ற இயற்கை விவசாய உத்திகளையும் பரீட்சித்துப் பார்த்து பதிவு செய்யுங்கள்.நல்லபலன் உண்டு.

    ‘இயற்கை வீட்டுத்தோட்டக்காரர்’ பட்டம் விரைவில் உங்களுக்கு.

    Like

    • Thanks Madam. இன்னும் நிறைய உத்திகள் இயற்கை விவசாயத்தில் இருக்கிறது. முடிந்த அளவுக்கு கற்றுக் கொண்டு வீட்டுத் தோட்டம் அளவில் முயற்சி செய்து பார்ப்போம்.

      //இயற்கை வீட்டுத்தோட்டக்காரர்’ பட்டம் விரைவில் உங்களுக்கு// 🙂 நன்றி

      Like

    • என்னிடம் போன சீசனில் இருந்து எடுத்த சில கத்தரி விதைகள் மட்டும் இருக்கிறது. மற்றபடி நான் வெளியே தான் வாங்கி கொள்கிறேன். தனி மடல் ஓன்று அனுப்பி இருக்கிறேன் மேடம். பாருங்கள்.

      Like

  4. சிவாண்ணா வணக்கம்…
    என்னங்ணா இது.. ஏதோ நாலு கம்பியை வச்சு மாடியில வலை கட்டுறீங்கனு பாத்தா இப்படி அடுக்கிகிட்டே போறீங்க.. மாடியில பெரிய பாத்தி, தரையில நிரந்தர மேட்டுப்பாத்தியெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்லை.. கலக்குறீங்கணா.. மனசுக்கு நிறைவா செடிகள் வளர்ந்து விளைச்சல் தந்தாலே போதும்,செலவெல்லாம் மறந்தே போகும்.. ஆமா உங்க வீட்டு நிதியமைச்சர் இதுக்கெல்லாம் எப்படி ஒப்புதல் தராங்க…

    அடுத்த பதிவு என்ன போடப்போறீங்களோனு பயமா இருக்குது 🙂
    வீட்டுக்குள்ளேயே தோட்டம் , கட்டில்ல காய்கறினு ஏதாவது வரும்னு நினைக்கிறேன்..

    அப்புறம் விதைகள் வாங்குறதுல எல்லாருமே கொஞ்சம் கவனமாக இருக்கனும் அண்ணா.. நாட்டு விதைகள், பாரம்பரிய விதைகள்னு விற்பனை செய்ற சிலர் , எல்லாரும் இல்லை ஒரு சிலர் கடைகளில் கிடைக்கும் விதைகளையே விற்பனை செய்றாங்க.. அவங்க எப்படி , எங்க விதைப்பெருக்கம் செய்றாங்கனு ஓரளவாவது தெரிஞ்சு வாங்குறது நல்லது.. முகநூல்ல அவங்க விடுற கதைகளை நம்பி வாங்க வேண்டாம்.. சமீபத்தில நீங்க வாங்குனதுல ஒரு சில விதைகள் அப்படிப்பட்டது தானோன்னு பயமா இருக்குது..

    மத்தபடி புதிய தளம், புதிய தோட்டம் ரெண்டுமே பட்டையை கிளப்பி போய்ட்டிருக்குது

    வாழ்த்துகள்ணா..

    Like

    • நன்றி இசக்கி

      // ஆமா உங்க வீட்டு நிதியமைச்சர் இதுக்கெல்லாம் எப்படி ஒப்புதல் தராங்க// 🙂
      இது மொத்தமாய் ஒரு பட்ஜெட் ஒதுக்கி செய்தாகி விட்டது. இனி இது போல பெரிய பட்ஜெட் எல்லாம் கிடைப்பது கடினம் தான். பட்ஜெட்-க்கு ஏற்ற மாதிரி விளைச்சல் எடுத்து காட்டி ஆகணும் 🙂

      இப்போதைக்கு இவ்வளவு தான். இறுதி பகுதியில் இன்னும் சின்ன சின்ன விஷயங்கள் இருக்கிறது. அவ்வளவு தான் தம்பி 🙂

      விதைகள் பற்றி சொல்லி இருக்கிறாய். உண்மை தான். இங்கே கடைகளில் (முக்கியமா ஆர்கானிக் ஸ்டோர்களில்) எதை எடுத்தாலும் நாட்டு விதை என்று தான் சொல்கிறார்கள். இப்போதைக்கு எனது முழு கவனம் தோட்டத்தை ஒரு அமைப்புக்குள் கொண்டு வருவது, அதில் இருந்து ஓரளவுக்கு விளைச்சல் எடுப்பது, விளைச்சலும் தொடர்ந்து எடுப்பது, நோய் மற்றும் பூச்சி கட்டுப்படுத்துதல் மற்றும் உரம்/வளர்ச்சி ஊக்கி மேலாண்மை. இவற்றில் கொஞ்சம் கற்றுக்கொள்ள வேண்டும்.

      இதன் பிறகு தான் இயற்கை விதைகள் பற்றி பெரிதாய் யோசிக்கலாம். உருப்படியான ஒரு சில வழிகள், நபர்கள் இருந்தால் கூறு. அதை முயற்சிக்கலாம்.

      Like

  5. வணக்கம் சிவா,

    முதல்ல என்னோட நன்றி கலந்த வாழ்த்துக்கள். இப்படி உங்களோட தோட்டம் அமைப்பு முறைல “continuous improvement” கொண்டு வரீங்க. என்ன புதுசா தோட்டம் வைபவர்களுக்கு ஒரு “encyclopedia”
    மாதிரி இருந்து என்னை போன்றவர்களுக்கு ஊக்கம் கொடுக்கறீங்க!

    shadenet மிகவும் அருமை. தோட்டத்திலே பாத்தி அமைப்பு அதை விட அருமை. வாழ்த்துக்கள் சார்.

    நான் வைத்த வெண்டை நன்றாக வருகிறது என்று நினைக்கிறன் . கத்திரி, தக்காளி நாற்று வைத்து இருக்கிறேன். புகைப்படம் எடுத்து அனுப்புகிறேன். 🙂

    அன்புடன்,
    மதன்
    தி நகர்

    Like

    • நன்றி மதன் 🙂

      உங்கள் தோட்டம் நன்றாக வருவது குறித்து மகிழ்ச்சி. படம் அனுப்புங்கள். பார்க்கிறேன். வெண்டை மாதிரி செடிகளை தினமும் கொஞ்சம் கவனித்து வாருங்கள். மாவுப் பூச்சி வந்து ஓரிரு நாளில் காலி செய்து விடும்.

      Like

  6. Ennoru miratal muyarchi Siva. padhipai padipadharke aarvamaaga irukiradhu..ungaladhu muyarchi thodaratum.

    enadhu veetu thotathilum mann hard thaan.. kinaru urai kondu raised bed amaikum yosanai irukiradhu.

    Endha july thaan season pola nadavu seiyalam ena plan. Oru padhipu edharkaga ezhuthungalen .. ellorukum payanpadum.

    Like

    • நன்றி மேடம்

      /kinaru urai kondu raised bed amaikum yosanai irukiradhu./. இது நல்ல ஐடியா. இடம் நிறைய இருந்தால் செய்யலாம். செய்த பிறகு படம் எடுத்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

      வரும் ஜூன்-ஜூலை சீசனுக்கு இன்னும் திட்டமிடவில்லை. திட்டமிட்ட பிறகு பகிர்ந்து கொள்கிறேன்.

      Like

  7. நன்றி மேடம்.

    தொடங்கும் போது நன்றாக தான் வரும். இதை தொடர்ந்து பராமரித்து வருவதில் தான் விஷயம் இருக்கிறது. 🙂

    Like

  8. Mr Siva

    I am Ravichandran, I have maditottam in my house. In that Katthiri poo pookirathu ana kaikka mattenguthu. Is there any reamedy?
    Pl. tell what u know.

    Ravi

    Like

  9. Summer hot season might be one reason. The plant just growing and started flowering now only, the summer heat will have some impact on it. Are you trying any growth promoter like Panchakavya, Meen Amilam, Arappu more karaisal. Give it a try and check for the results.

    Like

  10. Siva anna

    Neenga sonna madhiri native seeds narsary try la vechieruken neenga sonna madhiri
    1:1 man puhu uram & coco pith
    10 days aaguthu ennum seriya varala
    Kindly send a any solutions for this

    Anna unga latest madi thootam superna

    Like

    • நன்றி கார்த்திக்.

      விதைகள் எங்கே, எப்போது வாங்கினது என்று தெரியுமா? தினமும் நீர் ஊற்றி வருகிறீர்களா?. வெளியே கிடைக்கும் நாட்டு விதைகள் முளைப்பு திறன் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது. சில விதைகள் முளைப்பது கூட இல்லை.

      Like

      • Coimbatore agri intex 2015 la வாங்கினேன்

        நீங்கள் சொன்ன மாதிரி தினமும் நீர் விடுறேன்

        எந்த விதையும் சரியாக முளைக்கவில்லை

        Like

        • இது அவ்வளவு சிக்கலான விஷயம் இல்லை கார்த்திக். விதைகளின் பிரச்சனையாக கூட இருக்கலாம். சில நண்பர்கள் பெரிய, கடின விதைகளை நீர்/பஞ்சகாவியா தெளித்து ஒரு 12 மணி நேரம் வைத்து விதைக்கிறார்கள். அதனால் முளைப்பு திறன் கூடும். இதை முயற்சித்து பாருங்கள். நான் இது வரை இப்படி செய்ததில்லை. பாக்கெட்டில் இருந்து அப்படியே ட்ரே-யில் போட்டு விடுவது தான்.

          Like

  11. Karaiyan Thakkuthal nallathunu solrangale..karayan setha porulai thaan sappidumam..keela setha kattai kidantha atha thinga vara karayan nunniyr perukkathukku karanamam irukkuamam..unga karuthu yenna sir

    Like

    • உண்மை தான் நண்பரே. இங்கே விவசாய நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவரும் கரையான் நல்லது என்றே சொன்னார். முன்பு ஒரு முறை கரும்பு சக்கை நிறைய மூடாக்காக போட்டு நிறைய கரையான் வந்துவிட்டது அதனால் எடுத்து விட்டேன் என்றேன். அவர் கரையான் வந்தால் நல்லது தான். அவைகள் சீக்கிரம் மக்க வைத்து விடுமே என்றார்.

      Like

  12. Siva Sir, I have been reading your blog religiously. Your raised bed method is very inspiring. I just have a small doubt. After the yield of this season is over how do you plan to replenish and reinstate the contents of the bed. if you have a plan or if you have already done it. Please share it with us.

    I am asking this because I am concerned about how big the task is going to be, to recycle and refill these raised beds. I believe you have a strategy for this, so please share it with us.

    Keep up the great work Sir, you are an inspiration.

    Like

Leave a comment